முக்கியச் செய்திகள்

காட்டுக்குள் இரை தேட வேண்டிய சிறுத்தை மின்சாரக் கம்பத்தில் ஏறி இரை தேட வேண்டிய அவசியமென்ன?

கார்த்திகா வாசுதேவன்

தெலங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டத்து ‘மல்லாரம்’ வனப்பகுதியில் சிறுத்தை ஒன்று இரை தேடிக் கொண்டிருந்தது. இரை எதுவும் சிக்காத காரணத்தால் வனத்தை ஒட்டி,  மக்கள் வசிக்கும் கிராமப் பகுதிக்கு சிறுத்தை நகரத் தொடங்கியது. அங்கே அது எந்த இரையக் கண்டதோ தெரியவில்லை... தான் கண்டடைந்த இரையை அடைய அங்கிருந்த மின்சாரக் கம்பத்தின் மீது சிறுத்தை ஏறியதில் உயர் அழுத்த மின்கம்பிகளில் இருந்து கசிந்த மின்சாரத்துக்கு பலியாகி பரிதாபமாக உயிரிழந்தது. உயிரிழந்த நிலையில் மின்கம்பத்தின் உச்சியில் ஊசலாடிக் கொண்டிருந்த சிறுத்தையைக் கண்டு ஊர் மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கும், மின் பகிர்மான அலுவலக அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்க விரைந்து வந்த அதிகாரிகள் உடனடியாக மின்பகிர்மானத்தை நிறுத்தி இறந்த சிறுத்தையின் உடலை கம்பத்தில் இருந்து கீழே இறக்கினர்.

யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் அடர் வனத்தை வசிப்பிடமாகக் கொண்டவை. அந்த அடர் வனப்பகுதிகளில் அவற்றுக்கான இரையோ, உணவோ கிடைக்காத பட்சத்தில் தான் அவை வனத்தின் பிற பகுதிகளுக்குச் செல்லக் கூடும். தொடர்ந்து உணவுக்காக கிராம வயல்களைத் துவம்சம் செய்த யானைகள் பிடிபட்டன, கிராமத்தில் ஊடுருவிய சிறுத்தை பிடிபட்டது. ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயற்சிக்கும் போது யானை பலியானது. இரைக்காக மின் கம்பத்தில் ஏறிய சிறுத்தை பலியானது மாதிரியான செய்திகளை கடக்கும் போதெல்லாம் மனதை நெருடும் ஒரு கேள்வி... இந்தியாவில் வனப்பகுதிகள் குறைந்து வருகின்றனவா? அல்லது வன விலங்குகளுக்கான இரைகளுக்கும், உணவுகளுக்கும் பற்றாக்குறை ஆகி விட்டதா? எதற்காக இந்த விலங்குகள் தங்களது வசிப்பிடத்தை விட்டு வெளியில் வந்து ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றன? என்பதே அது!

உயிரியல் சமன்பாட்டைப் பொறுத்த வரை இந்த பூமிக்கு யானையும் தேவை, சிறுத்தையும் தேவை... ஏன் ஓரறிவு முதல் ஆறறிவு வரை கொண்ட அனைத்து ஜீவராசிகளும் தான் தேவை. ஒன்றையொன்று சார்ந்தும், உண்டும் வாழும் அந்த உயிரியல் சமன்பாட்டில் எந்த ஒன்று முற்றிலும் அழிந்தாலும் ஒட்டு மொத்த மனித குலத்துக்குமே அது மிகப்பெரிய கேடாக முடியக் கூடும். எனவே வனப்பகுதியை ஆக்ரமிப்பது, வன விலங்குகளை வேட்டையாடுவது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை அடையாளம் கண்டு தண்டித்தல் அவசியமாகிறது. ஆனால் அரசு இதிலெல்லாம் தீவிரமாகக் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. அரசு செலுத்தவில்லையா? அல்லது அதிகாரிகள் செலுத்தவில்லையா? என்பதும் கவனிக்கத்தக்க வினாவே!

Image courtsy: NDTV
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT