முக்கியச் செய்திகள்

ஃபுட்போர்டு கைப்பிடிகளை அகற்றியது பயணிகளின் வசதிகளைக் குறைக்க அல்ல, ரயில் மரணங்களைத் தவிர்க்க: தென்னக ரயில்வேயின் அதிரடி நடவடிக்கை!

RKV

தென்னக ரயில்வே, சென்னை புறநகர் லோக்கல் ரயில்களில் முதல் வரிசையில் அமைக்கப்பட்டுள்ள கைப்பிடிகளில் மூன்றை நிரந்தரமாக அகற்றியுள்ளது. லோக்கல் ரயில்களில் இரண்டு கதவுகளுக்கு இடையில் மொத்தம் மூன்று வரிசை இரும்புத் தாங்கியில் வரிசைக்குப் பத்து வீதம் மொத்தம் 30 கைப்பிடிகள் பொருத்தப்பட்டிருப்பது வழக்கம். இந்த கைப்பிடிகள் ரயில் பயணிகளின் செளகர்யத்துக்காக வடிவமைக்கப் பட்டவை. பொதுவாக வழக்கமான ரயில்களைக் காட்டிலும் இந்த லோக்கல் ரயில் பெட்டிகளில் ஆட்டம் அதிகமிருப்பதால் நின்று கொண்டு பயணிக்கும் பயணிகளுக்கு விழாமல் பயணிக்க மேற்படி கைப்பிடிகள் மிகப்பெரிய வசதியாக இருந்தன. ஆனால், அதிலும் ஒரு சிக்கல் இருந்தது கண்டறியப்பட்டது. பீக் நேரம் என்று சொல்லப்படக் கூடிய காலை  மற்றும் மாலை நேரங்களில் ஃபுட்போர்டில் பொருத்தப்பட்டுள்ள மூன்று கைப்பிடிகளைக் கைப்பற்றித் தொற்றுக் கொண்டு செல்ல  15 முதல் 20 பயணிகளுக்குள் மிகப்பெரிய தள்ளுமுள்ளு ஏற்படும். இதனால் மாற்றுத்திறனாளிப் பயணிகள், பெண்கள், குழந்தைகள், முதியோர் உள்ளிட்ட பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவது தவிர்க்க முடியாமலிருந்தது.

இதன் காரணமாக தாம்பரம் மற்றும் ஆவடி ரயில்வே நிலையங்களில் இருந்து இயக்கப்படும் ரயில்கள் அனைத்திலும் இரு நுழைவாயில்களை ஒட்டிய மூன்று கைப்பிடிகள் நிரந்தரமாக அகற்றப்பட்டுள்ளன என ரயில்வே நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைப்பிடிகள் நீக்கத்திற்கான முக்கிய காரணம், ரயில் பயணிகள் ஃபுட்போர்டில் பயணிப்பதைத் தவிர்க்கும் பொருட்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பீக் அவர்ஸ் என்று சொல்லப்படக் கூடிய காலை மற்றும் மாலை நேரங்களில் புறநகர் லோக்கல் ரயில்களில் ஃபுட்போர்டில் மட்டுமே சுமார் 15 முதல் 20 பயணிகள் அடைசலாக அப்பிக் கொண்டு பயணிக்கிறார்கள். குறிப்பாக செங்கல்பட்டு- சென்னை புறநகர் லோக்கல் விரைவு ரயில்களில் ஃபுட்போர்டில் பயணிகள் தொங்கிச் செல்லும் காட்சி அச்சம் கொள்ளச் செய்வதாக இருப்பதால் தென்னக ரயில்வே நிர்வாகம் முதற்கட்டமாக இப்படியொரு நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக ரயில்வே நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நுழைவாயில் கைப்பிடிகள் அகற்றப்பட்டுள்ளதால் இப்போது பயணிகள் வேறு வழியின்றி எத்தனை கூட்டமென்றாலும் ரயிலின் உட்புறத்திற்கு நகர்ந்தாக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர். ஃபுட்போர்டு பயண ஆபத்துகளைத் தவிர்ப்பதற்கு இந்த நடவடிக்கை உதவிய போதும் ரெகுலராக ரயில் பயணங்களில் ஈடுபடும் பழக்கம் கொண்ட பயணிகளை இந்த நடவடிக்கை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாகக் கூறுகிறார்கள். வேக வேகமாக ரயிலைப் பிடிக்க ஓடி வருபவர்கள் இனி ஃபுட்போர்டு கைப்பிடிகளை நம்பி ரயிலில் ஏற முடியாது. அதுமட்டுமல்லாமல் 

மும்பை புறநகர்ப் பகுதிகளில் இயக்கப்படும் சில மல்ட்டிபிள் யூனிட் மின்சார ரயில்களில் ஃபுட்போர்ட் பகுதியில் நின்று கொண்டு பயணிக்கும் பயணிகள் பாதுகாப்பாகப் பிடித்துக் கொண்டு பயணிக்க வசதியாக அடுத்தடுத்து உட்பக்கமாக மூன்று  இரும்புக் குழாய்கள் நிறுவப்பட்டிருக்கும். ஆனால் சென்னையில் இயக்கப்படும் மல்ட்டிபிள் மின்சார ரயில்களில் ஃபுட்போர்டு பகுதியில் பயணிகளின் வசதிக்காக ஒரே ஒரு இரும்புக்குழாய் மட்டுமே பொருத்தப்பட்டிருக்கிறது. எனவே இரு நுழைவாயில்களிலும் மூன்று கைப்பிடிகள் நீக்கப்பட்டபின் ஃபுட்போர்டில் பயணிக்கும் பயணிகள் கூட்டம் அதிகரிக்கையில் இனிமேல் வலுக்கட்டாயமாக உள்நோக்கி நகர வேண்டியவர்களாவார்கள். இதன்மூலம் பீக் அவர்ஸ் பயண நேரத்தின் போது பயணிகள் தங்களது முட்டிகளை உடைத்துக் கொள்ளும் அபாயம் தவிர்க்கப் படும் என்கிறார் ரயில்வே அதிகாரி ஒருவர்.

4 அலகுகள் அதாவது ஒரு அலகுக்கு மூன்று கோச்கள் வீதம் மொத்தம் 12 கோச்களை கொண்டது 12 கார் மல்ட்டி யூனிட் ரயில். இதில் ஒவ்வொரு யூனிட்டிலும் ஒரு மோட்டார் கோச்சும், இரு ட்ரெய்லர் கோச்சுகளும் இணைந்திருக்கும். இவற்றில் மோட்டார் கோச்சுகளில் இரண்டாகப் பகுக்கக் கூடிய நான்கு கதவுகளும் ட்ரெய்லர் கோச்சுகளில் 6 கதவுகளும் இருக்கும். இந்தக் கதவுகள் தோறும் மூன்று இரும்பு ராட்களில் பொருத்தப்பட்டிருக்கும் கைப்பிடிகள் ரயிலின் வேகம் அதிகரிக்கும் போதும் குறைக்கப்படும் போதும் ரயிலுக்குள் ஆட்டம் அதிகரித்தாலும், குறைந்தாலும் அவை பயணிகளைப் பாதிக்காமல் கீழே தள்ளாமல் பாதுகாப்பான பயணத்தை இதுவரை உறுதிப் படுத்தி வந்தன.

ஆனால், தற்போது கைப்பிடிகள் அகற்றப்பட்ட பின் பயணிகள் பரபரப்பான காலை நேரங்களில் ரயிலைப்பிடிக்க ஓடி வந்து பற்றிக் கொண்டு ஏற வசதியான நுழைவாயில் கைப்பிடிகள் இல்லாததைக் கண்டு ஏமாற்றத்துடன் நிற்க வேண்டியதாகிறது. என்கிறார் தென்னக ரயில்வேயின் இந்த திடீர் நடவடிக்கை மீது அதிருப்தி கொண்ட ரயில் பயணி ஒருவர்.

தினமும் மின்சார ரயில்களையே பயணத்திற்கு நம்பி இருக்கும் மறைமலை நகரைச் சேர்ந்த R கிருஷ்ணா எனும் பயணி சொல்வதென்னவென்றால்,  பரபரப்பான நேரங்களில் பீச் ஸ்டேஷனில் இருந்து செங்கல்பட்டு புறப்படும் பயணிகள் ரயில்களில் ஊரப்பாக்கம் வரையிலும் அனைத்து பெட்டிகளுமே ஏறத்தாழ நிரம்பி வழியும். அதைத்தாண்டி மறைமலைநகர் செல்ல வேண்டிய எங்களில் பலர் ரயில்களில் கைப்பிடி அகற்றப்பட்ட பிறகு கூட்ட நெரிசலில் ரயிலைப் பிடித்து உள்ளே ஏற முடியாமல் தொடர்ந்து தவித்து வருகிறோம். என்கிறார்.

கடந்த ஜூலை மாதத்தில் சென்னை புறநகர் மின்சார ரயிலில் கூட்ட நெரிசலில் ஃபுட்போர்டு கைப்பிடிகளைப் பற்றிக் கொண்டு பயணித்த பயணிகளில் ஏழு பேர், செயிண்ட் தாமஸ் மெளண்ட் ஸ்டேஷன் மூன்று மற்றும் 4 ஆம் எண் நடைமேடை அருகிலிருந்த கான்கிரீட் சுவரில் மோதி உயிரிழந்தனர்.

அதைத் தொடர்ந்தே தென்னக ரயில்வே நிர்வாகம் மேற்கண்ட பாதுகாப்பு நடவடிக்கையை நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை தினந்தோறும் போக்குவரத்துக்கு மின்சார ரயில்களை மட்டுமே நம்பி இருக்கும் புறநகர் ரயில் பயணிகளை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ள போதிலும் பயணிகளின் உயிருக்கு பாதுகாப்பு அளிப்பதாக இருப்பதாக ரயில்வே நிர்வாகம் கருதுகிறது.

ஏனெனில் சென்னையில் மட்டுமாக புறநகர் ரயில் சேவையை நம்பி நாளொன்றுக்கு சுமார் 11 லட்சம் பயணிகள் தினமும் பயணித்து வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT