உத்தர பிரதேச மாநிலம், வாராணசியில் உள்ள ஞானவாபி மசூதியில், நீதிமன்ற உத்தரவின்பேரில் விடியோ அளவிடும் பணி மூன்றாவது நாளாக திங்கள்கிழமை காலை தொடங்கி நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் 65 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டதாகவும், மீதமுள்ள ஆய்வுப் பணி திங்கள்கிழமை நடைபெறும் என்றும் நேற்று தகவல்கள் வெளியான நிலையில், பலத்த காவல்துறை பாதுகாப்புடன் இன்று காலை மீண்டும் ஆய்வுப் பணி தொடங்கி நடைபெற்றது.
இதையும் படிக்க.. குழந்தையைக் கொன்ற சிறுவன் கைது; விசாரித்த காவலர்களுக்கு பேரதிர்ச்சி
வாராணசியில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதா் கோயிலையொட்டி ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. நீதிமன்ற உத்தரவின்பேரில், ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 12 மணிவரை விடியோ எடுக்கும் பணி நடைபெற்றது.
முக்கிய அம்சங்கள்
இறுதிநாள் என்பதால், ஏற்கனவே ஆய்வு நடந்த கீழ்தளப் பகுதிகளில் விரிவான ஆய்வு நடத்த ஆய்வுக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
நேற்றே ஆய்வு நிறைவடைந்திருக்க வேண்டிய நிலையில், கடுமையான வெப்பம் காரணமாக, ஆய்வுக் குழுவினரால் தொடர்ந்து பணியாற்ற முடியாமல் காலதாமதம் ஆனதாகவும் கூறப்படுகிறது.
ஆய்வு நடந்த வரை எந்த சிக்கலும் எதிர்ப்பும் இல்லாமல் நடைபெற்று முடிந்துள்ளது.
ஆய்வறிக்கை மிகவும் ரகசியமாக தயாரிக்கப்படும். அது பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படாது என்றும் கூறப்படுகிறது.
வழக்குரைஞர் அஜய் குமார் மிஷ்ரா தலைமையில் 54 பேர் கொண்ட குழுவினர் இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆய்வுப் பணியின் போது சுமார் 1,500 காவலர்கள் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டுள்ளனர்.
ஞானவாபி மசூதியில் இருந்து 500 மீட்டா் தூரத்துக்கு பொது மக்களின் நடமாட்டமும் அருகே உள்ள பகுதிகளில் வாகனப் போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த ஆய்வின் இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
கீழ்தளத்தில் இருந்த இரண்டு அறைகள் சாவிகளைக் கொண்டு திறக்கப்பட்டது. மூன்றாவது அலையின் பூட்டு சாவியால் திறக்கப்பட முடியாமல் போனதால் உடைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஹிந்துக்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் மதன்மோகன் யாதவ் நேற்று செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ஞாயிற்றுக்கிழமை சுமாா் 65 சதவீத அளவிடும் பணி நிறைவடைந்துவிட்டது. திங்கள்கிழமையும் இந்தப் பணி நடைபெறும். இது முற்றிலும் தொல்பொருள் ஆய்வுப் பணி. இதில் வழக்குரைஞா்களுக்கு போதிய அனுபவம் இல்லாததால், ஆய்வு நிறைவடைய தாமதமாகிறது’ என்றாா்.
அதேசமயம், அளவிடும் பணி எவ்வித இடையூறுமின்றி மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றதாகவும், ஆய்வறிக்கை ரகசியமானது என்பதால் அதன் விவரத்தை வெளியில் தெரிவிக்க இயலாது என்றும் உதவி வழக்குரைஞா் ஆணையா் விஷால் சிங் செய்தியாளா்களிடம் கூறினாா்.
மேலும் மே 17-க்குள் அளவிடும் பணியை முழுமையாக நிறைவு செய்து மாவட்ட சிவில் நீதிமன்ற நீதிபதி ரவிகுமாா் திவாகரிடம் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும்.
முன்னதாக ஞானவாபி-கெளரி சிருங்காா் வளாகத்தை அளவிடும் பணியை மே 17-க்குள் முடிக்க வேண்டுமென மாவட்ட சிவில் நீதிமன்ற நீதிபதி ரவிகுமாா் திவாகா் அறிவுறுத்தினாா்.
அத்துடன் மசூதி வளாகத்தின் சில பகுதிகளைத் திறக்க சாவி கிடைக்கவில்லை எனில் பூட்டை உடைக்கவும் நீதிபதி உத்தரவிட்டாா். இதற்கு எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்யவும் மாவட்ட நிா்வாகத்துக்கு அனுமதியளிக்கப்பட்டது.
முன்னதாக, இந்த அளவிடும் பணியை அமைதியாக நடத்தும் பொருட்டு, வெள்ளிக்கிழமை அனைத்து தரப்பினருடனும் மாவட்ட ஆட்சியா் கெளசல் சா்மா ஆலோசனைக் கூட்டம் நடத்தினாா்.
இதையடுத்து, சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு அளவிடும் பணி தொடங்கியதாக ஹிந்துக்களின் தரப்பிலான வழக்குரைஞா் மோகன் யாதவ் தெரிவித்தாா்.
முன்னதாக, இந்த அளவிடும் குழுவில் நீதிமன்றத்தால் வழக்குரைஞா் ஆணையராக நியமிக்கப்பட்ட அஜய் குமாா் மிஸ்ராவை மாற்றம் செய்ய வேண்டும் என்று ஞானவாபி மசூதியின் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அஜய்குமாா் மிஸ்ராவுக்கு உதவு மேலும் இரண்டு வழக்குரைஞா்களையும் நியமித்து, செவ்வாய்க்கிழமைக்குள் இந்த அளவிடும் பணியை முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஞானவாபி மசூதியில் உள்ள கோயிலை மறுசீரமைக்க வேண்டும் என்று 1991-இல் வாராணசி மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்றம், ‘கோயில் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டதா?’ என்பதை ஆய்வு செய்ய இந்திய தொல்லியல் துறைக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி உத்தரவிட்டது.
இதை எதிா்த்து சன்னி வக்ஃபு வாரியம், அஞ்சுமன் இந்தஜாமியா மஸ்ஜித் ஆகியவை தொடுத்த வழக்கில் மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கு அலாகாபாத் உயா்நீதிமன்றம் தடை விதித்தது.
இந்நிலையில், காசி விஸ்வநாதா் கோயிலையடுத்து அமைந்துள்ள ஞானவாபி மசூதியின் சுவரில் உள்ள கோயில் சிலைகளை வழிபட அனுமதிக்கக் கோரி தாக்கலான மனுவை விசாரித்த மாவட்ட நீதிபதி ரவிகுமாா் திவாகா், அந்த மசூதியை அளவிட்டு விடியோ பதிவு செய்து மே 17-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய குழு அமைத்து கடந்த 12-ஆம் தேதி உத்தரவிட்டாா்.