நாடு முழுவதும் பரவலாக நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்திருக்கும் நிலையில் இதன் பின்ணியில், பயிற்சி மையங்கள் இருக்கலாம் என்றும், பாடத்திட்டங்களைக் குறைத்தது, வினாத்தாள் எளிதாக இருந்தது போன்றவற்றால் இவ்வாறு நடக்கலாம் என்றும் மத்திய அரசு தரப்பில் கூறப்படுவதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு நீட் தேர்வில், பயிற்சி மையங்களில் படித்த மாணவர்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றதால், அவற்றின் புகழுக்கு பங்கம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்திலேயும் இந்தப் போராட்டம் தூண்டப்பட்டிருக்கலாம் என்றும் மத்திய அரசு கருதுவதாகக் கூறப்படுகிறது.
தேர்வெழுத வரும் மாணவிகள் தலைமுடியை பின்னியிருக்கக் கூட அனுமதிக்காமல், தலைமுடியை கட்டாமல் வந்தால்தான் தேர்வு நேர்மையாக நடக்கும் என்பதை உறுதி செய்யும் தேசிய தேர்வு முகமை மீது இத்தனை புகார்கள் எழுந்துள்ளன. சில வகையான காலணிகளை அணிந்துவர அனுமதியில்லை என்பதால், எத்தனை மாணவர்கள் தேர்வெழுதும் மையத்தின் வாயிலிலேயே காலணிகளை அகற்றிவிட்டு, சுட்டெரிக்கும் வெயிலில், வெறும் காலில் சுடும் மணலில் நடக்க முடியாமல் ஓடியிருக்கிறார்கள். அப்படி கொதிக்க கொதிக்க மணலில் ஓடியும் தேர்வுகள் முறையாக நடக்கவில்லை என்றால் அது யார் குற்றம் என்கிறார்கள் மாணவர்கள்.
நீட் தேர்வுக்கு எதிரான மனு மீதான விசாரணையின்போது, நீட் தோ்வில் 1,563 பேருக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்திருந்தது. மேலும், கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்ட தோ்வா்களுக்கு ஜூன் 23-ஆம் தேதி மறுதோ்வு நடத்தப்படும் என்றும், மறுதோ்வை எழுத விரும்பாத மாணவா்களுக்கு கருணை மதிப்பெண்களின்றி தோ்வில் பெற்ற மதிப்பெண்களே இறுதி மதிப்பெண்களாக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது என்று விளக்கம் அளித்திருந்தது.
ஒரு வினா என்றால், அந்த வினாவுக்கான விடைகள் நான்கு இருக்கலாம். ஆனால், அந்த நான்கு பதில்களில் எது சரியானது என்று மற்றொரு நான்கு வாய்ப்புகளும் கொடுக்கப்பட்டிருப்பது நிச்சயம் மாணவர்களைக் குழப்பவே என்பது பெற்றோரின் கருத்து.
அதுமட்டுமல்லாமல், ஜேஇஇ போன்ற தேர்வுகள் கணினி மூலம் நடக்கும் நிலையில், நீட் தேர்வையும் கணினி மூலம் நடத்தினால், தவறான விடைகளை கொடுத்துவிட்டால் அதனை மீண்டும் மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைக்கலாம்.
‘நிகழாண்டு இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு) எழுதியவா்களில் 1,500-க்கும் மேற்பட்டோருக்கு அந்தத் தோ்வை நடத்திய தேசிய தோ்வு முகமை (என்டிஏ) தன்னிச்சையாக 70 முதல் 80 மதிப்பெண்கள் வரை கருணை மதிப்பெண்கள் என்ற பெயரில் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கியுள்ளது. இந்த விவகாரத்தை தெளிவுபடுத்தும் வரை, இளநிலை மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்குத் தடை விதிக்க வேண்டும்’ என உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதன் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆனால், மருத்துவக் கலந்தாய்வை நிறுத்திவைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட மறுத்துவிட்டது. வினாத்தாள் கசிந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்திருந்தது.
இது குறித்து தகவல்கள் கூறுவது என்னவென்றால், ஒப்பீட்டு அளவில், இந்த ஆண்டு நீட் வினாத்தாள் எளிதாக இருந்துள்ளது. ஆனாலும் தேர்வு முடிவுகளின்படி, மிகப்பெரிய நீட் தேர்வு பயிற்சி மையங்களில் படித்த மாணவர்களே நல்ல மதிப்பெண் பெறாததால், அவர்கள் முன்பு பயிற்சி மையமே திறனற்றது போன்ற தோற்றம் ஏற்பட்டுவிட்டது. இதுதான் போராட்டங்களுக்குப் பின்னணியாகக் கூறப்படுகிறது.
இந்த ஆண்டு பாடங்கள் குறைக்கப்பட்டதால் 23.3 லட்சம் பேர் தேர்வெழுதினார்கள். கிட்டத்தட்ட வினாத்தாள் எளிதாக இருந்தது.
வினாத்தாளும் எளிமையாக இருந்து, பாடத்திட்டம் குறைக்கப்பட்டதால் பாதிக்கப்படுவது பயிற்சி மையங்கள்தான். இதனால், வருங்காலத்தில் பயிற்சி மையங்களை நாடுவோர் குறையலாம். தங்களது சேவை தேவை என நினைக்கும் மாணவர்கள் குறையலாம். அது மட்டுமல்லாமல், இந்த ஆண்டு 20 நிமிடம் கூடுதலாகக் கொடுக்கப்பட்டதால் கட் ஆஃப் அதிகரித்திருக்கிறது.
கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு கொண்டு வந்த பொதுத் தேர்வு சட்டம், பயிற்சி மையங்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களைக் கொண்டு வந்துள்ளது. கட்டணம், பயிற்சி மைய கட்டமைப்பு, மாணவர்களின் மனநலனையும் காப்பது என பல அறிவுறுத்தல்கள் அதில் அடங்கியுள்ளன. ஒரு பக்கம் தேர்வை எளிதாக்கிவிட்டு, பயிற்சி மையங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதித்திருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கலாம்.
இதனால்தான் பயிற்சி மையங்கள் தற்போது தேசிய தேர்வு முகமைக்கு எதிராக போராட்டங்களைக் கிளப்பி விடுகின்றன என்று மத்திய அரசு கருதுவதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.