சைபர் கிரைம் குற்றத்தில் விசாரணை நடத்திய கோவா காவல்துறையினர், மோசடியாக பணப்பரிமாற்றம் நடந்த வங்கிக் கணக்கின் உரிமையாளரை விசாரித்த போதுதான், சைபர் குற்றவாளிகள், தனிநபர்களின் வங்கிக் கணக்கை வாடகைக்கு எடுத்துக்கொள்ளும் அதிர்ச்சித் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
பண மோசடி விவகாரத்தில், ஒரு நபரின் வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு கணக்குக்கு பணப்பரிமாற்றம் நடந்த சம்பவத்தில், பணப்பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கிக் கணக்கு ஒரு இளைஞருக்கு உரியது என்பது கண்டறியப்பட்டது. அவரிடம் விசாரணை நடத்தியபோதுதான், தனது வங்கிக் கணக்கை, சிலருக்கு அவர் வாடகைக்கு விட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
அதாவது, வேலையில்லாத இளைஞர்களைக் கண்டறிந்து மோசடி கும்பல் ஒன்று, பணப்பரிமாற்றம் செய்துகொள்ள உங்களது வங்கிக் கணக்கை வாடகைக்கு விட்டால் கணிசமான தொகை வழங்கப்படும் என்று கூறு, தகவல்களைப் பெறுகிறார்கள். இதன் மூலம், உண்மையான மோசடிக் கும்பலின் விவரங்கள் காவல்துறைக்குக் கிடைக்கப்பெறாமல் போய்விடுகிறது.
ஒரு இளைஞர் கூட்டத்தை தொடர்புகொண்ட மோசடிக் கும்பல், அந்த இளைஞர்களின் வங்கிக் கணக்கை தங்களுக்கு வாடகைக்குத் தருமாறும், வங்கிக் கணக்குக்கு வரும் ஒவ்வொரு ரூ.1 லட்சத்துக்கும் ரூ.1000 வாடகையாக இளைஞர்களுக்கு வழங்கப்படும் என்றும் கூறியிருக்கிறார்கள்.
வருவாய் இல்லாத இளைஞர்களும் இவர்களுக்கு தங்களது வங்கிக் கணக்கை வாடகைக்கு விட்டுள்ளனர் என்பது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு வங்கிக் கணக்கை வாடகைக்கு கொடுக்கும் இளைஞர்கள், காசோலை மற்றும் கையெழுத்திட்ட காசோலை என அனைத்து விவரங்களையும் மோசடியாளர்களிடம் கொடுத்திருக்கிறார்கள்.
சில வேளைகளில், மோசடியாளர்கள், இளைஞர்களின் வங்கிக் கணக்கிலிருந்து அவர்களே பணமெடுத்து, அவர்களுக்குரிய கமிஷனை எடுத்துக்கொண்டு தங்களிடம் கொடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதாவது, ரூ.45 லட்சம் மோசடி வழக்கில், கிட்டத்தட்ட 20 - 25 வயதுடைய இளைஞர்கள் பலரின் வங்கிக் கணக்கு மூலமாக மோசடியாளர்கள் பணத்தை மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் எத்தனையோ முன்னெச்சரிக்கைகளை வெளியிடு வந்தாலும், பங்குச் சந்தையில் அதிக லாபம் பெற்றுத் தருவதாக அண்மையில் ஒரு பெண்ணிடம் இதுபோன்ற மோசடி கும்பல் ரூ.90 லட்சத்தை ஏமாற்றியிருப்பது என ஏராளமான மோசடிகள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் இணைப்பில் இருப்பவர்களைத்தான் இந்த மோசடி கும்பல் குறிவைப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.