தற்போதைய செய்திகள்

ஆபத்தான முறையில் யானையை விரட்டிய அதிமுக பிரமுகருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

கோவை அருகே ஆபத்தான முறையில் யானையை விரட்டிய அதிமுக பிரமுகருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது வனத்துறை.

DIN

கோவை: கோவை அருகே ஆபத்தான முறையில் யானையை விரட்டிய அதிமுக பிரமுகருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது வனத்துறை.

கோவை பொள்ளாச்சியை அடுத்த மிகவும் பாதுகாக்கப்பட்ட ஆனைமலை புலிகள் காப்பகத்தின் மைய வனப்பகுதியில் நள்ளிரவில் அதிமுக பிரமுகர் ஒருவர் அத்துமீறி நுழைந்து தனது வாகனத்தின் உயர் ஒளிவிளக்குகளை ஒளிரச் செய்து, பின்னால் இருந்து யானைக்கு மிக அருகில் வாகனத்தை ஆபத்தான முறையில் மலைச்சாலையில் இயக்கி இளம் காட்டு யானையை விரட்டியடித்துள்ளார்.

வாகனத்தின் உயர் ஒளிவிளக்கு வெளிச்சத்தைக் கண்டு இளம் யானை மிரண்டு ஓடுவதை பின்னணியில் உரத்த இசையுடன் விடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டதுடன் தனது வாட்ஸ்அப் முகப்பில் வைத்துள்ளார்.இது சமூக வலைதளங்களில் வைரலாகி சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய புலிகள் காப்பக பகுதியான நவமலையில் வியாழக்கிழமை இரவு இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

இரவு நேரத்தில் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆழியார் சோதனைச் சாவடி மற்றும் குரங்கு அருவி சோதனைச் சாவடியை எப்படி வாகனம் கடந்தது என்பது தெரியவில்லை. அதிமுக கொடி கட்டிய வெள்ளை நிற ஸ்கார்பியோ (TN41 AZ 1) வாகனம் என்பது தெரியவந்துள்ளது. இந்த வாகனம் ஆழியார் சோதனைச் சாவடியை கடந்தாலும், வால்பாறை பதிவெண் கொண்ட வாகனம் என்பதால், குரங்கு அருவி சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வாகனம் நிறுத்தப்படாமல் சோதனைச் சாவடியை கடந்து வந்தது எப்படி என கேள்வி எழுந்துள்ளது.

பாதுகாக்கப்பட்ட ஆனைமலை புலிகள் காப்பகத்தின் மைய வனப்பகுதியில் நள்ளிரவு நேரத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்படி வேட்டையாடுவது போன்ற கடுமையான குற்றமாகும் மற்றும் இதுபோன்ற செயல்களுக்கு குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் விடியோ அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், மலைப்பகுதியில் உயர் ஒளிவிளக்கு பொருந்திய வாகனத்தை ஆபத்தான முறையில் இயக்கி யானையை விரட்டியது அதிமுக இளைஞர் இளம்பெண் பாசறை செயலாளரான கோட்டூரைச் சேர்ந்த மிதுன் என தெரியவந்துள்ளது.

இதையடுத்து மிதுன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மிதுனுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தலைமை வனவிலங்கு பாதுகாவலர் ஸ்ரீனிவாஸ் ஆர் ரெட்டி கூறியதாவது: இது கடுமையான விதிமீறல் என்றும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இது காட்டு விலங்குகளை வேட்டையாடும் வரம்பிற்கு உட்பட்டது மற்றும் பிரிவு 51 இன் கீழ் மூன்று ஆண்டுகளுக்குக் குறையாமல் சிறைத்தண்டனை வழங்கப்படும். மேலும் ரூ.25 ஆயிரம் அபராதத்துடன் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை நீட்டிக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பாக துறை ரீதியான விசாரணையை தொடங்கியுள்ளது. துணை இயக்குநர் (பொள்ளாச்சி) பார்கவ தேஜாவும் விசாரணை நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

சமூக ஆர்வலர்கள்

குற்றஞ்சாட்டப்பட்டவர் மீது அபராதம் விதித்து விட்டுவிடக் கூடாது, இது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்பதால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் கூறுகின்றனர்.

"நவமலையில், மின்வாரிய ஊழியர்கள் குடியிருப்புகளும், சில தனியார் தென்னந்தோப்புகளும் மட்டுமே உள்ள பகுதி. இந்த பகுதி அதிக விலங்குகள் நடமாடும் பகுதி என்பதால் இந்த பகுதியில் நுழைவதற்கு அதிக கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், இதுபோன்ற தனியார் வாகனங்கள் நுழைவது கவலைக்குரியதாகும். இதுபோன்று அத்துமீறுவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கோயம்புத்தூரைச் சேர்ந்த வனவிலங்கு பாதுகாவலர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது ஏன்?: தேஜஸ்விக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

மாயம் செய்கிறாய்... ரச்சனா ராய்!

வானவில்... சோபிதா துலிபாலா!

பழைய ஓய்வூதியத் திட்டத்தை விரைந்து அமல்படுத்த வலியுறுத்தல்

இளவஞ்சி... சஞ்சி ராய்!

SCROLL FOR NEXT