விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு புதன்கிழமை (ஜூலை 10) நடைபெறும் இடைத் தேர்தலையொட்டி, விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.
விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த திமுகவின் நா. புகழேந்தி உடல்நலக்குறைவால் ஏப்ரல் 6-ஆம் தேதி காலமான நிலையில், இத்தொகுதிக்கு ஜூலை 10-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதைத் தொடர்ந்து ஜூன் 14 முதல் 21-ஆம் தேதி வரை வேட்புமனுதாக்கலும், 24-ஆம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனையும் நடைபெற்றது. ஜூன் 26-ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இத்தொகுதியில் திமுகவின் அன்னியூர் அ. சிவா, பாட்டாளி மக்கள் கட்சியின் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் பொ. அபிநயா உள்ளிட்ட 11 கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேச்சை வேட்பாளர்கள் என 29 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.
பிரசாரம் நிறைவு:
கடந்த 15 நாள்களுக்கும் மேலாக இத்தொகுதியில் நடைபெற்று வந்த பிரசாரம் திங்கள்கிழமை மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக 276 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இத்தேர்தலில் மொத்தமாக 2,37 031 வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
276 வாக்குப்பதிவு மையங்களில் 42 பதற்றமானவையாகவும், 3 மிகவும் பதற்றமானவையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்குப்பதிவு மையங்களையும் கண்காணிக்க வெப் கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் தேர்தல் நடத்தும் அலுவலர் மு.சந்திரசேகர் தலைமையில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு மையம் வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குப் பதிவு மையத்தில் பயன்படுத்தக்கூடிய பொருள்கள் உள்ளிட்டவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.
276 வாக்குப்பதிவு மையங்கள் 23 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, அந்த மண்டலத்துக்குள்பட்ட மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டன.
வாக்குப்பதிவு மையங்களில் போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.