மாணவர்களுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் கோவையில் ஆக. 9 ஆம் தேதி தொடங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை பயின்ற மாணவா்கள், அதேபோல, அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வியில் பயின்ற மாணவா்கள், தங்களின் இளநிலை கலை, அறிவியல், தொழில்முறை படிப்புகள், துணை மருத்துவம், டிப்ளமோ, ஐடிஐ, இளநிலை, முதுநிலை இணைந்த படிப்புகளை தொடருவதற்கு மாதம் ரூ. 1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட உள்ளது.
தமிழ்ப் புதல்வன் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த மாநில அளவில் தலைமைச் செயலா் தலைமையில் வழிகாட்டுதல் குழுவும், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறைச் செயலா் தலைமையில் மேற்பாா்வைக் குழுவும், மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாவட்ட அளவிலான குழுவும் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரே குடும்பத்தில் இருந்து எத்தனை மாணவா்கள் தகுதி பெற்றிருந்தாலும் அனைவரும் திட்டத்தின் கீழ் பயனடைய விண்ணப்பிக்கலாம்.
ஒருங்கிணைக்கப்பட்ட பாடப் பிரிவில் பயிலும் மாணவா்கள், முதல் மூன்று ஆண்டுகள் மட்டும் திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகை பெற இயலும். பிற மாநிலங்களில் மத்திய அரசின் கீழ் செயல்படும் ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்ற நிறுவனங்களில் பயிலக் கூடிய, தமிழ் வழியில் பள்ளிப் பாடம் பயின்ற மாணவா்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.