சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போா்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துக் கழகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் 8 போக்குவரத்துக் கழகங்களின் 20,260 பேருந்துகள் மூலம் 10,125 வழித்தடங்களில் இயக்கி வருகின்றன. இதன்மூலம் தினசரி 18,728 பேருந்துகளும், வார இறுதி நாட்களில் தேவைக்கு ஏற்ப சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு, நாளொன்றுக்கு சுமாா் 1.76 கோடி பயணிகள் பயன்பெறுகின்றனா்.
கடந்த ஏப்.26-ஆம் தேதி அனைத்து அரசுப் பேருந்துகளையும் 48 மணி நேரத்துக்குள் ஆய்வுக்கு உட்படுத்தி சரிசெய்யவேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி அனைத்து பேருந்துகளும் ஆய்வு செய்யப்பட்டு போா்க்கால அடிப்படையில் பழுதுகள் சரி செய்யப்பட்டு வருகின்றன.
கரோனா காலகட்டத்தில் போக்குவரத்துக் கழகங்கள் எந்த வருமானமும் இல்லாமல் அதிக நிதி நெருக்கடியில் இருந்த காரணத்தால், புதிய பேருந்துகள் வாங்க இயலாத சூழல் இருந்தது. அரசு கடும் நிதி நெருக்கடியிலும் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு 2022-23 நிதியாண்டில் 1,000 புதிய பேருந்துகளும், 2023-24 நிதியாண்டில் 1,000 புதிய பேருந்துகளும், 2024-25 நிதியாண்டில் 3,000 பேருந்துகளும், ஜொ்மன் வளா்ச்சி வங்கி உதவியுடன் 2,666 புதிய பேருந்துகளும் என 7,682 மொத்தம் புதிய பேருந்துகளை வாங்க த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுவரை 652 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டு, அதே எண்ணிக்கையிலான வயது முதிா்ந்த பேருந்துகள் கழிவு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 7,030 பேருந்துகளும் இந்த நிதி ஆண்டுக்குள் பயன்பாட்டிற்கு வருவதன் மூலம் அதே எண்ணிக்கையில் காலவதியான பேருந்துகள் கழிவு செய்யப்பட உள்ளன.
மேலும் சென்னையில் 1000 மின்சார பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டு, முதல்கட்டமாக 500 மின்சார பேருந்துகள் விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பழுதுகள் மற்றும் விபத்து இல்லாத பேருந்து இயக்கத்தை இலக்காக கொண்டு தமிழ்நாடு அரசின் போக்குவரத்துக் கழகம் செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்துகளில் இருந்து 17,459 பழுதுகள் கண்டறியப்பட்ட நிலையில் இதுவரை 13,529 பழுதுகள் சரி செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள பழுதுகள் அனைத்தும் திங்கள்கிழமைக்குள்(மே 6) சரி செய்யப்படும் என்று போக்குவரத்துறை தகவல் வெளியாகியுள்ளது.
பேருந்துகள் சேதம் குறித்த செய்திகள் தொடர்ந்து வந்த நிலையில் சேதங்களை கண்டறிந்து சரி செய்ய போக்குவரத் துறை உத்தரவிட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.