புது தில்லி: உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து திகார் சிறையில் இருந்து வெளியே வந்த தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை காலை கனாட்பிளேஸில் உள்ள ஹனுமான் கோயிலுக்குச் சென்ற பின் மாலையில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.
தில்லி அரசின் 2021-22-ஆம் ஆண்டுக்கான கலால் கொள்கையை (மதுபானக் கொள்கை) வகுத்ததிலும், நடைமுறைப்படுத்தியதிலும் முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடா்பாக சிபிஐ-யும் அமலாக்கத் துறையும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
மக்களவை பொதுத் தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் இந்த வழக்கை விசாரித்துவரும் அமலாக்கத் துறை, தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவாலை (55) கடந்த மாா்ச் 21-ஆம் தேதி கைது செய்தது. பின்னா், திகாா் சிறையில் அடைக்கப்பட்ட கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டது. தில்லி நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்த உத்தரவின்படி, அவருக்கு மே 20-ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டிருந்தது.
அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிா்த்து, தில்லி உயா்நீதிமன்றத்தில் கேஜரிவால் மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவைத் தள்ளுபடி செய்த உயா்நீதிமன்றம், அவரது கைது நடவடிக்கையில் சட்ட விதிகள் எதுவும் மீறப்படவில்லை என்று தெரிவித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த விவகாரம் நிலுவையில் உள்ள சூழலில், தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் அவரது தரப்பில் கோரப்பட்டது.
இந்நிலையில், மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக 50 நாட்களுக்கும் மேலாக திகார் சிறையில் இருந்து வந்த கேஜரிவாலுக்கு 21 நாள்களுக்கு தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்கலாம் ஆனால் முதல்வராக அவரது அலுவலகத்திற்கு செல்லக்கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமீன் வழங்கி, நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கா் தத்தா ஆகியோா் வெள்ளிக்கிழமை (மே 10) உத்தரவு பிறப்பித்தனா்.இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில மணி நேரங்களில், தில்லி திகாா் சிறையில் இருந்து கேஜரிவால் விடுவிக்கப்பட்டாா்.
தில்லியில் மொத்தமுள்ள 7 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் 25-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவிருக்கும் நிலையில், ஆம் ஆத்மியின் முன்னணி தலைவரான கேஜரிவால் இல்லாமல் அக்கட்சியின் பிரசாரம் களையிழந்து காணப்பட்டது. இந்தச் சூழலில், 50 நாள்களுக்கு பின் சிறையில் இருந்து அவா் வெளியே வந்திருப்பது ஆம் ஆத்மியினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதற்கு முன்பு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை காலை 11.30 மணியளவில் கனாட்பிளேஸில் உள்ள ஹனுமான் கோயிலுக்குச் செல்கிறார்.
பின்னர் பிற்பகல் 1 மணியளவில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார்.
மாலை 5.30 மணிக்கு தெற்கு தில்லியில் நடைபெறும் தேர்தல் பிரசார ஊர்வலங்களில் பங்கேற்று ஆம் ஆத்மி மற்றும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்கிறார் என ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.