டேவிஸ் கோப்பையின் காலிறுதிச் சுற்றில் ஏற்பட்ட தோல்வியுடன் டென்னிஸில் இருந்து ரஃபேல் நடால் விடைபெற்றார்.
தெற்கு ஸ்பெயினின் மலகாவில் உள்ள மார்டின் கார்பெனா விளையாட்டு மைதானத்தில் நடந்த டேவிஸ் கோப்பை காலிறுதிச் சுற்றில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஸ்பெயினின் நட்சத்திர வீரர் ரஃபேல் நடால், டென்னிஸில் இருந்து தோல்வியுடன் விடைபெற்றார்.
22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஸ்பெயின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் நவம்பர் மாதம் நடக்கும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.
ரஃபேல் நடால் தனது கடைசி ஆட்டத்தில் 4-6,4-6 என்ற செட் கணக்கில் டேவிஸ் கோப்பையில் 80-ஆம் தரவரிசையில் உள்ள வீரரான நெதர்லாந்தின் போடிக் வான் டி ஸாண்ட்ஸ்கல்ப்பிடம் தோல்வியடைந்தார். இதன்மூலம், ஸ்பெயின் காலிறுதியில் 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
ஆட்டம் முடிந்ததும் ரசிகர்கள் அனைவரும் சேர்ந்து “ரஃபா... ரஃபா.. ரஃபா...” என்று கூச்சலிட்டனர். இதனால், ரஃபேல் கண்ணீர் விட்டு அழுது உணர்ச்சியை வெளிப்படுத்தினார்.
டேவிஸ் கோப்பை போட்டியில் தொடர்ச்சியாக 29 ஒற்றையர் பிரிவில் வெற்றிகளைப் பெற்றுள்ள ரஃபேல் நடால், 2004, 2008, 2009, 2011 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஸ்பெயின் அணி டேவிஸ் கோப்பையை வெல்வதற்கு உறுதுணையாக இருந்தார்.
இதுவரை 14 பிரெஞ்சு ஓபன், 2 ஆஸ்திரேலியா ஓபன், 2 விம்பிள்டன், 4 அமெரிக்க ஓபன், 2008 கோடைகால ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம், 90 ஏடிபி தொடர் என பல்வேறு சாதனைகளை ஸ்பெயின் நட்சத்திர வீரர் ரஃபேல் நடால் படைத்துள்ளார்.
டேவிஸ் கோப்பையில் தனது முதல் போட்டியில் தோயுற்ற ரஃபேல் நடால், தனது கடைசி போட்டியிலும் தோற்று கண்ணீருடன் விடைபெற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.