தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்றிரவு புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (புயல் சின்னம்) இன்று(நவ. 28) காலை 8.30 மணி நிலவரப்படி, நாகை மாவட்டத்துக்கு தென்கிழக்கே 310 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 410 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே 480 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது, வடக்கு - வடமேற்கு திசையில் இலங்கை கடற்கரையையொட்டியப்படி தமிழக கடற்கரையை நோக்கி மிக மெதுவாக நகர்ந்து வருகிறது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறாமல் இருப்பதற்கு அதன் நகர்வில் ஏற்பட்ட தாமதமே காரணம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 2 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மீண்டும் நகராமல் ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது.
புயல் சின்னம் உருவாகியதில் இருந்தே குறைந்த வேகத்திலும், அவ்வபோது நகராமலும் ஒரே இடத்தில் நிலை கொண்டிருப்பது புயலாக உருவாகாமல் இருப்பதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.
இலங்கை கடல் பகுதியில் இருந்து தமிழக கடல் பகுதியில் நுழைந்து புயலாக மாறி வழித்தடம் அமைத்து வர ஏதுவாக வங்கக்கடலில் 2 வெப்ப நீரோட்டம் உள்ளது. ஆனால், இந்த 2 வெப்ப நீரோட்டமும் சந்திக்கும் இடத்தில் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது.
இதையும் படிக்க: சென்னையில் நாளைமுதல் தீவிரமடையும் மழை!
தமிழக கரையையொட்டிய நீரோட்டத்தைப் பிடித்து புயல் சின்னம் வலுவடைந்தால் தமிழகத்தில் வியாழக்கிழமை இரவு முதல் மீண்டும் மழை பெய்யத் தொடங்கும் என்றும், எனினும் புயல் சின்னம் 2 வழித்தடத்தை எடுத்து தமிழக கரைக்கு தாமதமாக வந்தால் மழை பெய்வது தாமதமாகும் என்றும் கூறப்படுகிறது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்றிரவு ஃபென்ஜால் புயலாக உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கரைகடக்கும் முன்பாக புயல் செயல் இழந்து, நவ. 30 ஆம் தேதி காரைக்கால் - மாமல்லபுரம் இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.