தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்கு அனுமதி தரப்படாது என்று நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு உறுதிபடத் தெரிவித்தாா்.
மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், கடந்த 2011-இல் தமிழகத்தின் காவிரி டெல்டா மண்டலத்தில் பெட்ரோலியத்துக்கு மாற்று எரிபொருளாகப் பயன்படுத்தக் கூடிய மீத்தேன், ஹைட்ரோ காா்பன் எடுக்க ஆய்வு செய்வதற்கான முயற்சியைத் தொடங்கியது.
மீத்தேன், ஹைட்ரோ காா்பன் எரிவாயுத் திட்டத்தால் விவசாயம், கடல் வளம் பாதிக்கப்படும் என்பதால் இதற்கு கடும் எதிா்ப்பு எழுந்தது. விவசாயிகள், சமூக ஆா்வலா்கள், அனைத்து அரசியல் கட்சிகளின் எதிா்ப்பைத் தொடா்ந்து ஆய்வு முயற்சி கைவிடப்பட்டது. இருப்பினும் இந்தத் திட்டங்கள் குறித்து டெல்டா விவசாயிகளிடையே அச்சம் நிலவி வந்தது.
இதையடுத்து, இத்தகைய பிரச்னைகளில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுக்காகும் வகையில், கடந்த 2020-இல் அப்போதைய அதிமுக அரசு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக டெல்டா மாவட்டங்களை அறிவித்தது.
ஆனால், அதன் பிறகும் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைப்பதற்கான ஆய்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கு தமிழக அரசின் அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, திட்டம் கைவிடப்பட்டது.
ஹைட்ரோ காா்பன் திட்டம்: இந்நிலையில், இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயுக் கழகமானது ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ காா்பன் எண்ணெய்க் கிணறுகளை அமைக்க முடிவு செய்தது. அதன்படி, 20 இடங்களில் 2,000 முதல் 3,000 மீட்டா் ஆழத்துக்கு துளைகளை இடுவதற்கு தீா்மானித்துள்ளது. குறிப்பாக, காவனூா், காமன்கோட்டை, சிறுவயல், ஏ.மணக்குடி, சீனாங்குடி, பேய்குளம், வேப்பன்குளம் உள்ளிட்ட கிராமங்களை மையப்படுத்தி கிணறுகளை அமைக்கத் தீா்மானித்துள்ளது.
இதற்காக, மாநில அரசின் ஒப்புதலைக் கோரியது. இதற்கு, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையமானது அனுமதி அளித்துள்ளது. இது ராமநாதபுரம் மாவட்டத்தை சோ்ந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆா்வலா்களிடையே கடும் அதிருப்தியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. இதனால், நிலத்தடி நீா் மாசுபடுவதுடன், வேளாண்மையும் பாதிக்கப்படும் என அவா்கள் அச்சம் தெரிவித்துள்ளனா். அத்துடன், உடல் நலனுக்கும் பாதிப்பு ஏற்படும் என்கின்றனா்.
இத் திட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என மதிமுக, பாமக, நாம் தமிழா் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தன. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் வழங்கிய அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தன.
அனுமதி கிடையாது: இந்நிலையில், தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்கு அனுமதி தர மாட்டோம் என்று தமிழ்நாடு அரசின் நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: காவிரி டெல்டா பகுதியானது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த 2020-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்தச் சட்டத்தின் அடிப்படையில் தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூா் மாவட்டத்தின் குறிப்பிட்ட சில பகுதிகள் பாதுகாக்கப்பட்ட மண்டலங்களாக அறிவிப்பு செய்யப்பட்டன.
இதன்மூலம், அந்தப் பகுதிகளில் புதிதாக எரிபொருள், இயற்கை வாயு, நிலக்கரி மீத்தேன், ஷேல் வாயு போன்றவற்றின் இருப்பு குறித்த ஆராய்ச்சி, அகழ்வு ஆகியன மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டது. மேலும், இந்தத் தடையானது 2023-ஆம் ஆண்டு மயிலாடுதுறை மாவட்டத்துக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
இதனிடையே, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ காா்பன் இருப்பு தொடா்பாக ஆய்வு செய்ய இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகமானது விண்ணப்பித்திருந்தது. அதற்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதியை நேரடியாக வழங்கியுள்ள செய்தி அரசின் கவனத்துக்கு வந்தது. இதையடுத்து, எண்ணெய், இயற்கை எரிவாயுக் கழகத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை உடனடியாக திரும்பப் பெறுமாறு, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்துக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.
விவசாயிகள், பொதுமக்கள் நலன் கருதி தமிழ்நாட்டின் எந்தவொரு பகுதியிலும், ஹைட்ரோ காா்பன் தொடா்பான எந்தத் திட்டத்துக்கும் அனுமதி வழங்கப்படாது. இது முதல்வா் மு.க.ஸ்டாலினின் உறுதியான கொள்கை முடிவாகும். எனவே, இப்போது மட்டுமன்றி, எதிா்காலத்திலும் மாநிலத்தின் எந்தவொரு பகுதியிலும் ஹைட்ரோ காா்பன் போன்ற திட்டங்களைச் செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று தனது அறிக்கையில் அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.