சேலம்: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக இருக்கக் கூடிய விஜய் அரசியல் ரீதியாக பேச வேண்டும் என்றும் நான் அதிமுகவுக்குதான் வாக்கு கேட்பேன் என சேலத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
உறவினர் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சேலம் வந்திருந்த ஓபிஎஸ் செய்தியாளர்களுடன் பேசினார்.
அப்போது, அரசியலில் தனித்து விடப்பட்டுள்ளீர்களா என்ற கேள்விக்கு, தேவையான நேரத்தில் என்னுடைய கருத்தை தெரிவிப்பேன். என்னைப் பொறுத்தவரை பிரிந்துள்ள அதிமுகவினர் அனைவரும் ஒன்று சேர வேண்டும். அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே தமிழகத்தில் வெற்றி பெறுகின்ற சூழ்நிலை உருவாகும். இதுதான் என்னுடைய நிலைப்பாடு, இதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா உருவாக்கிய இயக்கம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம் அதிமுகவை தொண்டர் இயக்கமாகத்தான் எம்ஜிஆர் உருவாக்கினார். மக்கள் இயக்கமாக அதிமுக என்றைக்கும் செயல்படும்.
இந்த இயக்கத்தை யாராவது பிளவு படுத்த நினைத்தால் அது யாராலும் முடியாது. அதிமுக இயக்கத்துக்கு எந்த பின்னடைவும் ஏற்படாது என்றார்.
மேலும், சட்டப்பேரவைத் தேர்தலில் யார் முதல்வராக வேண்டும் என்பது மக்கள் கையில்தான் உள்ளது. மக்கள் தீர்ப்பு தான் மகேசன் தீர்ப்பு.
கூட்டணி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, தேர்தலின் போதுதான் முடிவு தெரியும். அதற்கு இன்னும் ஒன்பது மாதங்கள் உள்ளன. புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா இருவரும் 50 ஆண்டுகாலமாக அதிமுகவை மக்கள் இயக்கமாக வழி நடத்தினார். அது சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் இயங்க வேண்டும்.
அதிமுகவில் தற்போது எம்ஜிஆர், ஜெயலலிதா வகுத்துக் கொடுத்த சட்ட விதிகள் கேள்விக்குறியாக உள்ளது. அதற்காகத்தான் நீதிமன்றத்தில் போராடி வருகிறோம்.
நான் கட்சியில் அம்மாவின் நம்பிக்கையாக இருந்தேன். 13 ஆண்டுகள் பொருளாளராக பதவி வகித்தேன். இன்றுவரை நான் அதிமுகவில் தொண்டராக தான் இருக்கிறேன் தலைவராக இல்லை என்றார்.
மேலும், திமுகவின் நான்கரை ஆண்டு ஆட்சி செயல்பாடுகள் குறித்து நான் நாள்தோறும் அறிக்கையாக வெளியிட்டு வருகிறேன். திமுகவின் குறைகள் குறித்தும் தெரிவித்து வருகிறேன்.
தமிழகத்தில் திமுக, தவெகவுக்கு இடையேதான் போட்டி என கூறப்படுவது குறித்த கேள்விக்கு, ஒவ்வொருவரும் கட்சியிலும் உள்ளவர்கள் நாங்கள் முதல்வராக வருவோம் என்று தான் ஆசைப்படுவார்கள். கட்சியின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் அரசியல் நாகரிகம் கருதி பேச வேண்டும். பெருந்தன்மையோடு பேச வேண்டும். தவெக தலைவர் விஜய் கருத்துக்கள் அரசியல் ரீதியாக இல்லை. அவர் பேசியதில் சில பேச்சுக்கள் ஏற்புடையதாக இல்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.