சென்னை: மகளிரை 'ஓசி' என அவமதிக்கும் திமுக அரசு இனியாவது திருந்தட்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம், மண்ணூத்து பகுதியில் புதியதாக கட்டப்பட்ட சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்து பேசிய ஆண்டிப்பட்டி திமுக சட்டப் பேரவை உறுப்பினா் ஆ.மகாராஜன், மக்களின் மனம் அறிந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதில் ஒன்றுதான் மகளிர் விடியல் பயணத் திட்டம். நான் முன்பு கூறியதுபோல, மகளிர் அனைவரும் அரசு பேருந்தில் 'ஓசி'-இல் தேனி, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி என பல்வேறு பகுதிகலுக்கு பயணியுங்கள். வீட்டில் உள்ள ஆண்கள் சமையல் செய்யட்டும் என்று பேசினார்.
சமுதாய நலக்கூடம் திறப்பு விழாவில் பொதுமக்கள் மத்தியில் கட்டணமின்றி பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிரை 'ஓசி' என விமர்சித்த மகாராஜன் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திமுக சட்டப் பேரவை உறுப்பினா் ஆ.மகாராஜன் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெள்ளிட்டுள்ள கண்டன அறிக்கையில்,
கட்டணமின்றி பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிரை 'ஓசி' என்று திமுக பேரவை உறுப்பினர் விமர்ச்சித்திருப்பது கண்டனத்துக்குரியது. இதற்கு முன்பு முன்னாள் அமைச்சர் பொன்முடியும் இதே போன்று பேருந்துகளில் கட்டணமின்றி பயணிப்போரை 'ஓசி' என்று தரம் தாழ்ந்து விமர்சித்ததும், திமுக மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் ரூ.1000 வாங்கியதால் தானே பளபளனு இருக்கீங்க என்று பெண்களைக் கொச்சையாக விமர்சித்தார்.
மக்கள் நலனை மேம்படுத்தும் போர்வையில் திட்டங்களை அமல்படுத்தி அதன் விளம்பரங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் பொடுப்பதும், பின் பயனாளிகளை 'ஓசி' என்று கீழ்த்தரமாக விமர்சிப்பதும் தான் திராவிட மாடல் போலும்!
ஒவ்வொரு முறையும் மகளிர் பயனாளிகளை விமர்சிப்பதில் காட்டும் முனைப்பை ஓட்டை உடைசலாக இருக்கும் பேருந்துகளை சரிப்படுவதிலோ அல்லது அனைத்து மகளிருக்கும் ரூ.1000 கிடைப்பதை உறுதி செய்வதிலோ திமுக தலைவர்கள் காட்டாதது ஏன்?
அதிகார மமதையில் எளிய மக்களை எள்ளி நகையாடி ஏளனப்படுத்துவது ஏற்புடையதல்ல! மகளிரை அவமதிக்கும் திமுக அரசு இனியாவது திருந்தட்டும்! என கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.