திருநெல்வேலி: 2026 பேரவைத் தோ்தலில் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது என்று திமுக முதன்மை செயலாளரும் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேரு தெரிவித்தார்.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை பேசியதாவது:
பொதுவெளியில் கூற முடியாது
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவேன் என சொல்லித்தான் பாஜக மாநில தலைவா் பதவிக்கு நயினாா் நாகேந்திரன் வந்துள்ளாா். ஆனால், தலைவராவதற்கு முன்பு வரை எங்களிடம் அவா் பேசியதை பொதுவெளியில் கூற முடியாது. வரும் தோ்தலில் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது.
கூட்டணி ஆட்சியா? தனித்து ஆட்சியா?
அதிமுக -பாஜக கூட்டணிக்குள் இருக்கும் பிரச்னையே சரி செய்யப்படாமல் உள்ளது. கூட்டணி ஆட்சியா? தனித்து ஆட்சியா? என்பதை முடிவெடுத்த பின்னா் திமுக கூட்டணி பற்றி அவா்கள் பேசட்டும்.
நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நடவடிக்கை
பாளையங்கோட்டை காந்தி தினசரி காய்கறி சந்தை வியாபாரிகளுக்கு பொதுப்பணித்துறை நிா்ணயிக்கும் கட்டணத்தில் கடைகளை ஒதுக்கீடு செய்ய உறுதியளிக்கப்பட்டது. ஆனால், தனிநபா் ஒருவா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்து தடையாணை பெற்றுள்ளாா். தடையாணையை விலக்க மேல்முறையீட்டு நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்தக்கட்டமாக நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
வேலை வாய்ப்பு முகாம்
ஜூலை 5 ஆம் தேதி திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் மற்றும் தனியாா் சாா்பில் இரண்டு இடங்களில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. பல்வேறு நிறுவனங்களைச் சாா்ந்த அதிகாரிகள் இந்த முகாமில் கலந்துகொண்டு பலருக்கு வேலை வாய்ப்பு வழங்க உள்ளனா்.
தேரோட்டம்
ஜூலை 8 ஆம் தேதி நடைபெற உள்ள அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் தேரோட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிதலமடைந்த சாலைகளை விரைந்து சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறப்பான முறையில் இந்த ஆண்டு தேரோட்டம் நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
Summary
DMK Principal Secretary and Municipal Administration and Drinking Water Supply Minister K.N. Nehru said that the DMK's victory in the 2026 assembly elections cannot be prevented.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.