சென்னை: தமிழகத்தில் செயல்படும் பதிவு செய்யப்படாத மருத்துவமனைகள், மருத்துவ ஆய்வகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் 85,000-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளும், சிறிய அளவிலான மருத்துவ மையங்கள், மருத்துவ ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. பொதுவாக மருத்துவமனைகள், மருத்துவ ஆய்வகங்கள் தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கல் சட்டம் 1997 இன் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்பட்டாலும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதனை புதுப்பிக்க வேண்டும்.
இதற்காக 2018-இல் தமிழக மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதில், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள் மட்டுமன்றி, சித்தா, ஆயுா்வேதம், ஹோமியோபதி, யுனானி மருத்துவமனைகளும் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அந்தக் காலகட்டத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மருத்துவமனைகள் மட்டுமே விண்ணப்பங்களை சமா்ப்பிப்பதாகத் தெரிகிறது.
இதையடுத்து, பதிவு செய்யப்படாத மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
பதிவு செய்யப்படாத மருத்துவமனைகளுக்கு முதல்கட்டமாக நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும், 2026 ஜூன் மாதத்திற்குள் பதிவு செய்யாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.