எஸ்ஐஆர் விவகாரத்தில் வேப்பங்காய் கசப்பது போல் இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் திமுகவுக்கு கசக்கிறது என்றும் எஸ்ஐஆர் பணியில் திமுக மாவட்டச் செயலாளர்களை போன்று சென்னை மாநகராட்சி ஆணையர் செயல்படுகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் குற்றம்சாட்டினார்.
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தப் பணிகள் மாவட்டம் தோறும் நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் திமுக அரசு ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுவருவதாக அதிமுக சார்பில் தொடர் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் எஸ்ஐஆர் பணிகளில் திமுகவின் தலையீட்டை நிறுத்தக்கோரி திமுக அரசை கண்டித்து சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் எதிரே சென்னை மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒருபுறம் திமுக அரசு தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் எஸ்ஐஆர் பணிகளை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் மறுபுறம் திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக அதிமுக சார்பில் தேர்தல் அதிகாரிகளுக்கும் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளுக்கும் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டும். புகார்கள் அடிப்படையில் இதுவரை எந்தவித உரிய நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்பதை குற்றச்சாட்டி அதிமுக சார்பில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் அதிமுகவினர் குற்றம்சாட்டி திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
அதிமுகவை பொறுத்தவரை நியாயமான சுதந்திரமான நேர்மையான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக உள்ளோம். ஆனால் திமுக இறந்த குடிபெயர்ந்த மற்றும் கள்ள ஓட்டுக்களை நம்பிதான் உள்ளது. தேர்தல் நேரத்தில் கள்ள ஓட்டு போட்டு போலியான வெற்றியை பெறுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எஸ்ஐஆர் விவகாரத்தில் வேப்பங்காய் கசப்பது போல் இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் திமுகவுக்கு கசக்கிறது.
பேருக்கு எஸ்ஐஆர் வேண்டாம் என்று சொல்லும் ஸ்டாலின், கட்சிக்காரர்களை முடிக்கிவிட்டு எஸ்ஐஆர் பணியின் மூலம் கள்ள ஓட்டுகளையும் இறந்தவர்கள் ஓட்டுகளையும் பத்திரப்படுத்துவது ஏன்?, எஸ்ஐஆர் பணிகளை திமுக புறக்கணிக்க வேண்டியது தானே?, சாக்குபோக்குக்காக எதிர்த்துவிட்டு எஸ்ஐஆர்ஐ தீவிரமாக அமல்படுத்தும் கட்சி திமுக. திமுகவின் மாவட்டச் செயலாளர்களை போன்று திமுக மாவட்ட அமைச்சர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு கட்சியின் மாவட்ட செயலாளர் போன்று மாநகராட்சி ஆணையர் செயல்படுகிறார் என ஜெயகுமார் குற்றம்சாட்டினார்.
பாஜக எஸ்ஐஆர்-ஐ ஆதரிப்பதால் அதிமுக ஆதரிக்கவில்லை. அதிமுகவை பொறுத்தவரை வாக்காளர் பட்டியல் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும். இதற்கு எஸ்ஐஆர் உதவியாக உள்ளது. திமுக கள்ள ஓட்டை நம்பி இருப்பதால் எஸ்ஐஆர் திருடனுக்கு தேள் கொட்டியது போன்று ஆகிவிட்டது.
எஸ்ஐஆர் பணியில் மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் மிரட்டப்படுகிறாரா? என்ற கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார், எஸ்ஐஆர் பணியில் ஐஏஎஸ் அதிகாரிகளை திமுக மிரட்டத்தான் செய்யும். அதற்காக ஏன் ஐஏஎஸ் அதிகாரிகள் ஏன் பயப்படவேண்டும்?, உங்களுக்கு சம்பளம் கொடுப்பது யார்? அரசு ஊதியம் வழங்குகிறது. இல்லையென்றால் பதவியை ராஜிநாமா செய்து விட்டு செல்லுங்கள். அதைவிட்டுவிட்டு திமுக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டால் உயர் பதவி வழங்குவார்கள் அதில் நிறைய பணம் பார்க்கலாம் என்ற ஆசையில் நாக்கை தொங்க போட்டுக்கொண்டு இருப்பவர்களுக்கு இது தான் நடக்கும். அதிமுக யாரையும் மிரட்டவில்லை, கடமையைத்தான் செய்யச் சொல்கிறோம் என்றார்.
Election Commission's actions are hurting DMK says Former AIADMK Minister Jayakumar
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.