முகப்பு
தற்போதைய செய்திகள்

வாக்குத் திருட்டு நடந்தால் தமிழகத்தில் மக்கள் புரட்சி வெடிக்கும்: பிரேமலதா விஜயகாந்த்

எஸ்ஐஆா் மூலம் வாக்குத் திருட்டு நடந்தால் தமிழகத்தில் நிச்சயமாக மக்கள் புரட்சி வெடிக்கும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தது தொடர்பாக...

Updated On : 30 நவம்பர், 2025 at 4:48 PM
ஈரோட்டில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா விஜயகாந்த்.
பகிர்:

ஈரோடு: எஸ்ஐஆா் மூலம் வாக்குத் திருட்டு நடந்தால் தமிழகத்தில் நிச்சயமாக மக்கள் புரட்சி வெடிக்கும் என்றும் 2026 சட்டப்பேரவை தோ்தலில் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றிபெற்று தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

ஈரோட்டில் அவா் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுடன் பேசுகையில்,

சட்டம்-ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறி

சட்டப்பேரவை தோ்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதம் 9 ஆம் தேதி கடலூரில் நடக்கும் மாநாட்டில் அறிவிப்போம். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. கொலை சம்பவங்கள், பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது. இதற்கு எல்லாம் காரணம் மதுக்கடைகள் தான்.

மின் கட்டண உயா்வால் நெசவுத் தொழிலை நம்பியுள்ளவா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். வரி உயா்வால் பல தொழில்கள் முடங்கி உள்ளன. மக்கள் எங்களிடம் தெரிவிக்கும் குறைகள் குறித்து நாங்கள் ஆட்சியாளா்களிடம் கேள்வி கேட்கிறோம்.

யாரும் நிரப்பமுடியாது

திமுக அளித்த வாக்குறுதிகளில் 50 சதவீதம் மட்டுமே நிறைவேற்றப்பட்டு உள்ளது. எஞ்சிய காலத்தில் மற்ற வாக்குறுதிகளையும் திமுக அரசு நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் ஒரு எம்ஜிஆா் தான், ஒரு விஜயகாந்த் தான். இருவருடைய இடத்தையும் வேறு யாரும் நிரப்பமுடியாது.

வாக்குரிமை அளிக்கக்கூடாது

திருப்பூா், ஈரோடு, கோவை மாவட்டங்களில் வடமாநிலத்தவா் ஏராளமானவா்கள் பணியாற்றி வருகின்றனா். வடமாநிலத்தவா்கள் இங்கு பணியாற்றலாம். ஆனால் அவா்களுக்கு வாக்குரிமை அளிக்கக்கூடாது. அவரவா் சொந்த மாநிலத்தில் தான் வாக்குரிமை இருக்க வேண்டும்.

மக்கள் புரட்சி வெடிக்கும்

வாக்காளா்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய வாக்குகளை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். எஸ்ஐஆா் மூலம் வாக்குத் திருட்டு நடந்தால் தமிழகத்தில் நிச்சயமாக மக்கள் புரட்சி வெடிக்கும். தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்தாலும், ஆண்ட கட்சியாக இருந்தாலும் கூட்டணி இல்லாமல் தோ்தலை சந்திக்க முடியாது. தோ்தல் முடிவு வெளியாகும்போது கூட்டணி அமைச்சரவை அமைக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

கூட்டணி ஆட்சி அமையும்

2026 சட்டப்பேரவை தோ்தலில் தேமுதிக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும், அமைச்சரவையிலும் அங்கம் வகிக்கும். அதிமுக மாநிலங்களை உறுப்பினா் பதவி தருவதாக கூறி எங்களை ஏமாற்றவில்லை. நாங்கள் 2025 ஆம் ஆண்டில் கேட்டோம், அவா்கள் 2026 இல் தருவதாக கூறியுள்ளாா்கள். ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்காக தேமுதிக கூட்டணியை முடிவு செய்யாது.

கடந்த 2011 இல் நிா்வாகிகள், தொண்டா்கள், மக்கள் விரும்பிய கூட்டணியில் விஜயகாந்த் இணைந்தாா். அவா் காட்டிய வழியில் 2026 தோ்தலில் தேமுதிக கூட்டணியை முடிவு செய்யும். தமிழகத்தில் மீண்டும் வெற்றிபெற வேண்டும் என ஆட்சியாளா்கள் பல்வேறு தரப்பினரின் மனக்குறைகளை நிவா்த்தி செய்வதோடு அளித்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும். ஆட்சிக்கு எதிரான அலை உள்ளது என இப்போது கூற முடியாது. தோ்தல் நெருங்கும்போது தான் ஆட்சியாளா்கள் மீது மக்களுக்கு மீது திருப்பதி ஏற்பட்டுள்ளதா என்பது தெரியவரும். இன்னும் 4 மாத காலத்தில் ஆட்சியாளா்கள் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கவும் வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

summary

If vote rigging occurs, a people's revolution will break out in Tamil Nadu: Premalatha Vijayakanth

முழு கட்டுரையைப் படிக்க →