வாஷிங்டன்: நவம்பர் 1 முதல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு மேலும் கூடுதலாக 100 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். ஏற்கனவே சீனப் பொருள்கள் மீது 30 சதவீதம் வரி அமலில் உள்ள நிலையில், தற்போது மொத்தமாக சீனா மீது 130 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து முக்கியமான மென்பொருட்களுக்கும் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனாவை இலக்காகக் கொண்ட புதிய மற்றும் கடும் வர்த்தக நடவடிக்கையை வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார். டிரம்ப் அறிவிப்பு அமெரிக்க-சீன வர்த்தக போரை புதிய உச்சத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது.
இது தொடர்பாக அவரது சமூக வலைதள பக்கமான ட்ரூத் சோஷியல் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:
சீனா வர்த்தகத்தில் ஒரு முன்னோடியில்லாத நிலைப்பாட்டை எடுத்துள்ளது என்றும், அமெரிக்கா அதற்குத் தக்க பதிலடி கொடுக்கும் என எச்சரித்துள்ளார்.
"நவம்பர் 1 முதல் (அல்லது சீனா எடுக்கும் எந்தவொரு நடவடிக்கைகளையும் அல்லது மாற்றங்களையும் பொறுத்து முன்னதாகவும்), அமெரிக்கா, சீனா தற்போது செலுத்தும் 30 சதவீத வரியுடன் கூடுதலாக 100 சதவீத வரியை விதிக்கும், மேலும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் அனைத்து முக்கியமான மென்பொருட்களுக்கும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிப்போம்" என்று கூறியுள்ளார்.
"வர்த்தகத்தில் சீனா ஒரு அசாதாரணமான ஆக்ரோஷமான நிலைப்பாட்டை" எடுத்துள்ளது என்றும், சீனா தனது அனைத்துப் பொருள்களுக்கும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்கத் திட்டமிட்டு உள்ளதாகவும், "உலக நாடுகளுக்கு இது தொடர்பாக விரோதமான கடிதத்தை" அனுப்பியுள்ளதாக கிடைத்த தகவல்களே இந்த வரி விதிப்புக்கு காரணம் என டிரம்ப் கூறியுள்ளார்.
மேலும், உலகிற்கு மிகவும் விரோதமான கடிதத்தை அனுப்புவதன் மூலம் சீனா வர்த்தகத்தில் அசாதாரணமான ஆக்ரோஷமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது என்பது இப்போதுதான் தெரிய வந்துள்ளது.
இந்த திட்டம் பல ஆண்டுகளுக்கு முன் அவர்களால் வகுக்கப்பட்டு உள்ளன. "சீனாவின் இந்த நடவடிக்கையை சர்வதேச வர்த்தகத்தில் முற்றிலும் கேள்விப்படாதது, பிற நாடுகளுடன் நடந்துகொள்வதில் இதுவொரு தார்மீக அவமானம்" என கடுமையாக சாடியுள்ள டிரம்ப், இது விதிவிலக்கு இல்லாமல் அனைத்து நாடுகளையும் பாதிக்கிறது, சீனப் பொருள்களுக்கு "பெரிய அளவிலான வரி அதிகரிப்பு உட்பட வலுவான எதிர் நடவடிக்கைகளுடன் பதிலளிக்க அமெரிக்கா தயாராகி வருவதாக அவர் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே, தென்கொரியாவில் நடைபெறும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில்(எபிஇசி) கலந்துகொள்ளும் இரு நாட்டு தலைவர்களும் வரும் 30 ஆம் தேதி சந்திக்க இருந்த நிலையில், ஜி ஜின்பிங்கை "சந்திப்பதற்கு எந்த காரணமும் இல்லை" என்று டிரம்ப் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.