பென்னாகரம்: ஒகேனக்கல் வனப்பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றைய யானை அந்த வழியாகச் செல்லும் சுற்றுலா வாகனங்களைக் கண்டதும் மிரண்டு வாகனங்கள் மீது தாக்கும் நிலைக்குச் செல்வதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
ஒகேனக்கல் தமிழ்நாட்டின் தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு முதன்மையான புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாகும். தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல் அருவிப் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. ஒகேனக்கல் பகுதிக்கு பென்னாகரம் பகுதியில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்ல வேண்டியுள்ளது.
ஆண்டுதோறும் வறட்சி காலங்களில் கர்நாடகம் மற்றும் ஆந்திரம் மாநிலங்களில் இருந்து யானைகள் கூட்டமாக இடம்பெயர்வது வழக்கம்.
தற்போது யானைகள் கூட்டத்திலிருந்து வெளியேறிய ஒற்றை யானை ஒகேனக்கல் மற்றும் பென்னாகரம் வனப் பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீர் தேடி அவ்வப்போது சாலையை கடப்பதுமாக இருந்து வந்தது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.15 மணியளவில் ஒகேனக்கல் வனப்பகுதிக்கு உள்பட்ட கணவாய் மீன் கீழ்ப்பகுதியில் உள்ள ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட வடிகால் வாரிய நிலையம் பகுதியில் இருந்து பென்னாகரம் ஒகேனக்கல் நெடுஞ்சாலையை ஒற்றை யானை கடந்துள்ளது. அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் ஒற்றை யானையை கண்டதும் வாகனங்களை சாலையிலேயே நிறுத்தினர். ஒரு சில சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் இருந்தபடியே கூச்சல் இடுவது, வாகன ஒலி எழுப்புவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். அதீத ஒளியை கேட்ட ஒற்றை யானை மிரண்டு வாகனத்தை நோக்கி தாக்குவது போன்று துரத்தியதால் வாகன ஓட்டிகள் அச்சத்திற்கு உள்ளாகினர்.
ஒகேனக்கல், பென்னாகரம் வனப்பகுதிகளில் இருந்து அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி சாலையை கடக்கும் ஒற்றை யானை உள்ளிட்ட வனவிலங்குகளை காக்கும் வகையில் மாவட்ட வனத்துறையினர் விடுமுறை நாள்களில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபடுவதும், மடம் சோதனைச் சாவடி பகுதியில் சுற்றுலா வாகன ஓட்டிகளிடம் வனவிலங்கையை கண்டதும் அதீத ஒலி எழுப்புவது, அருகில் சென்று புகைப்படம் எடுக்க முயல்வது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என அறிவுறுத்தி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்ய வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.