முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்திலிங்கம் தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை புதன்கிழமை (ஜன. 21) ராஜிநாமா செய்தார்.
சமீபத்தில் ஓபிஎஸ் ஆதரவாளரான ஆலங்குளம் தொகுதி மனோஜ் பாண்டியன் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்த நிலையில், வைத்திலிங்கம் தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ் பிரிந்துள்ள நிலையில், கட்சி ஒருங்கிணைப்பு குறித்து பேசியதால் அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை எடப்பாடி பழனிசாமி நீக்கியிருந்தார்.
இதனால், அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், கடந்த நவ. 26 ஆம் தேதி கோபிசெட்டிப்பாளையத்தின் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார். பின்னர் தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இவரைத் தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளரான ஜே.டி.சி. பிரபாகர் தவெகவில் இணைந்தார்.
வைத்திலிங்கம் ராஜிநாமா
இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தனது ஒரத்த நாடு தொகுதி பேரவை உறுப்பினர் பதவியை புதன்கிழமை (ஜன. 21) ராஜிநாமா செய்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவிடம் தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கினார்.
எம்.எல்.ஏ. பதவியை வைத்திலிங்கம் ராஜிநாமா செய்துள்ளதால், இனி அவர் எந்தக் கட்சியிலும் இணையலாம். கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி, பதவியில் இருக்கும்போது வேறு ஒரு கட்சியில் இணையக்கூடாது என்பதால், வைத்திலிங்கம் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் திமுகவில் புதன்கிழமை (ஜன.21) இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.