முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்திலிங்கம் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த நிலையில் திமுகவில் இணைந்தார்.
அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு என்ற அமைப்பை உருவாக்கி செயல்பட்டு வருகிறார். இதில் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த தஞ்சை ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏ வைத்திலிங்கம் தனது பதவியை இன்று ராஜிநாமா செய்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் அப்பாவுவிடம் தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கினார்.
தொடர்ந்து இவர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். வைத்திலிங்கத்துடன் அவரது மகன் பிரபுவும் திமுகவில் இணைந்துள்ளார்.
கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி, பதவியில் இருக்கும்போது வேறு ஒரு கட்சியில் இணையக்கூடாது என்பதால், வைத்திலிங்கம் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
வைத்திலிங்கம் இதுவரை 4 முறை ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர், முன்னாள் அமைச்சராகவும் இருந்துள்ளார்.
சமீபத்தில், ஓபிஎஸ் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ், முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.
அதிமுகவில் இருந்து விலகிய செங்கோட்டையன் விஜய்யின் தவெகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.