செய்திகள்

ஷனா இக்பால்! தற்கொலைக்கு எதிரான தன்னம்பிக்கைப் போராளி சாலை விபத்தில் மரணித்தது விதியாலா? கவனக்குறைவாலா?!

கார்த்திகா வாசுதேவன்

சாகும் வயதில்லை ஷனாவுக்கு. வாழ்க்கையை அதன் அத்தனை ரசனைகளோடும் வாழத்துடிக்கும் 30 வயதுப் பெண்மணி. நேற்று, தன் கணவர் அப்துல் நதீமுடன் ஹைதராபாத், நர்சிங்கி எனுமிடத்தில் நெடுஞ்சாலை கார் விபத்தொன்றில் திடீரென மரணித்து விட்டார். ஷனாவைப் பற்றிச் சொல்வதென்றால் பேச நிறைய விஷயங்கள் உண்டு. தன்னந்தனியாக தனது மோட்டார் சைக்கிளில் இந்தியா முழுதும் சுற்றி வந்தவர் ஷனா. யூனியன் பிரதேசங்களைக் கூட விடவில்லை. மொத்த இந்தியாவையும் ஷனா ஏன் சுற்றி வந்தார் என்றால்... அதற்கொரு சுவாரஸ்யமான துவக்கம் உண்டு.

சில ஆண்டுகளுக்கு முன் தாங்க இயலாத மன அழுத்தத்தால் அவதிப்பட்ட ஷனா, சாலை விபத்தில் மரணமடைய வேண்டும் என்று முயற்சித்தார். அப்படித் தொடங்கியது தான் அவரது மோட்டார் சைக்கிள் பயணம். இந்திய நெடுஞ்சாலைகளினோரம் ஏதோ ஓரிடத்தில் சீறி வரும் வாகனம் ஏதோவொன்றால் தூக்கி வீசப்பட்டு நொடியில் மரணம் சம்பவிக்க வேண்டும் என்றெண்ணித்தான் ஷனா தனது நாடு தழுவிய மோட்டார் சைக்கிள் பயணத்தைத் துவக்கினார்.

ஆனால் பயணிக்க, பயணிக்க அவரது தற்கொலை வேகம் தணிந்தது மட்டுமல்ல நாட்டின் வெவ்வேறு கலாச்சாரங்களையும், மக்களது ஏழ்மையையும், கடினமான அவர்களது வாழ்க்கையும் கண்ணாரக் காணக் காண ஷனாவுக்கு தற்கொலையின் மீது வெறுப்பானது. விளைவு தனது பயணத்தின் முடிவில் ஷனா, தற்கொலை செய்து கொள்ள முயற்சிப்பவர்களௌக்கு மன நல ஆலோசனை வழங்கி அவர்களது தற்கொலை எண்ணத்தை முறித்துப் போகச் செய்யும் அளவுக்கு மிகச் சிறந்த தன்னம்பிக்கைப் பேச்சாளராக அடையாளம் காணப்படும் நிலையில் வந்து நின்றார். ஊடகங்கள் ஷனாவுக்கு வழங்கிய அடையாளம் இது தான். தற்கொலை எத்தனை கொடுமையான முடிவு என, அந்த முயற்சியில் ஈடுபட்டு அதிலிருந்து வெற்றிகரமாக மீண்டவர்களால் தானே உண்மையாக அறிந்திருக்க முடியும். ஷனா அறிந்திருந்தார் என்பதற்கு அவரது தன்னம்பிக்கைப் உரைகளே உதாரணம். 

ஷனாவின் நாடு தழுவிய மோட்டார் சைக்கிள் பயணம் குறித்த வீடியோ பதிவு...

இப்படி தன்னைப் போன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு தோற்றுப்போன அனைவருக்கும் மட்டுமல்லாது அனைத்து இந்தியப் பெண்களுக்குமான முன்னுதாரணமாகத் திகழவல்ல திறமை கொண்ட ஷனா இக்பால், அவரே எதிர்பாராத தருணமொன்றில் அவர் முன்னெப்போதோ நினைத்த அல்லது எதிர்பார்த்திருந்த வகையில் தற்போது அவரது மரணம் நிகழ்ந்தது தான் சோகத்திலும் பெரும் சோகம். விபத்துக்கு காரணம் மிதமிஞ்சிய வேகம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. 

விபத்தில் ஷனா சம்பவ இடத்திலேயே உயிரிழக்க அவரது கணவர் அப்துல் நதீம் கடுமையான காயங்களுடன் தொலிசெளக்கியிலுள்ள ஆலிவ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். ஷனாவின் உடல் போஸ்மார்ட்டத்திற்காக உஸ்மானியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது.

மிதமிஞ்சிய வேகத்தில் காரை இயக்கியதில் கார் டிவைடரில் கடுமையாக மோதியதால் விபத்து நேர்ந்திருக்கிறது. எனவே காவல்துறையினர் ஐபிசி 304 (மரணம் குறித்த அலட்சியத்தால் விபத்து நேர்வது) மற்றும் ஐபிசி பிரிவு 337 (பாதுகாப்பு குறித்த கவனமின்றி தன்னுடன் இருப்பவர்களையும் விபத்துக்கு உட்படுத்துதல்) எனும் இரு பிரிவுகளின் மேல் இந்த விபத்து குறித்து வழக்குப் பதியப்பட்டுள்ளது என தொலிசெளக்கி காவல் நிலையத்தின் சப் இன்ஸ்பெக்டர் சுதிர்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதக்கிணறு ஊராட்சியில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

காவலா்களுக்கு மன அழுத்தம் குறைப்பு விழிப்புணா்வுப் பயிற்சி

புற்றுநோயாளிகளுக்கு கூந்தல் தானம் அளித்த செவிலியா்கள்

கோபியில் இன்று இலவச கண் பரிசோதனை முகாம்

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

SCROLL FOR NEXT