நாம் தினமும் பயன்படுத்தக்கூடிய பொருள்களில் முக்கியமானது தண்ணீர் பாட்டில். உடலுக்கு கேடு விளைவிக்காத சுத்தமான தண்ணீரைக் குடிக்க வேண்டும் என்று அக்கறை காட்டும் நாம், அதனைச் சேமித்து வைத்திருக்கும் தண்ணீர் பாட்டில் சுத்தமாக இருக்கிறதா? என்று கவனிப்பதில்லை.
பெரும்பாலானோர் தண்ணீர் பாட்டில்களை வாரத்திற்கு ஒருமுறை, ஏன் மாதத்திற்கு ஒருமுறைகூட கழுவுகிறார்கள். இதனாலே பலவிதமான தொற்றுகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
இதனாலே தண்ணீர் நிரப்பி வைக்கும் பாட்டிலை அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம் என்று கூறும் நிபுணர்கள், அதனை சுத்தம் செய்யாவிட்டால் ஏற்படும் விளைவுகளையும் பட்டியலிடுகின்றனர்.
பிளாஸ்டிக் பாட்டில் நல்லதா?
மீண்டும் பயன்படுத்தக்கூடிய உலோகம், பிளாஸ்டிக், கண்ணாடி பாட்டில்கள் என எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இவை அனைத்திலுமே சுத்தம் செய்யாவிட்டால் கிருமிகள் வளர வாய்ப்புள்ளது. ஆனால், பிளாஸ்டிக் பாட்டில்களில் அதிகமாகவே வாய்ப்புள்ளது. ஏனெனில் பிளாஸ்டிக் பாட்டில்களில் கண்ணுக்குத் தெரியாத ஒரு கீறல் ஏற்பட்டால்கூட அதன் உட்புற இடுக்குகளில் கிருமி வளரும் என்று கூறுகிறார்கள்.
மீண்டும் பயன்படுத்தக்கூடிய பாட்டில்களில் நீர் மட்டுமின்றி எந்த திரவத்தால் நிரப்பப்பட்டாலும் அது அழுக்காகிவிடும், அவற்றைத் தொடர்ந்து சுத்தம் செய்வது முக்கியம் என்று நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள். உதாரணமாக பழச்சாறுகள் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தும் பாட்டில்களையும் தினமும் கழுவ வேண்டும்.
தண்ணீர் பாட்டில்களில் வாய் வைத்து தண்ணீர் குடிக்கும்போது வாயில் இருந்து கிருமிகள் அதில் ஒட்டிக்கொள்கின்றன. அதுபோல பாட்டிலின் திறக்கும் பகுதி மற்றும் மூடியை நம் கைகளால் தொடும்போது கைகளில் இருந்தும் கிருமிகள் பாட்டிலுக்குச் செல்கின்றன.
எனவே, பாட்டிலை சுத்தம் செய்யாவிட்டால் அது பூஞ்சை, பாக்டீரியா, பிற நுண்ணுயிரிகளின் இனப்பெருக்க இடமாக மாறும். இதனால் வயிற்று வலி, தொண்டை சார்ந்த பிரச்னைகள், ஏன், ஆஸ்துமா போன்ற விளைவுகளைக்கூட ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறார்கள்.
இது சாதாரணமானது போல உங்களுக்குத் தெரியலாம், ஆனால் சுகாதாரத்தில் இது மிகவும் முக்கியமானது என்றும் கூறுகிறார்கள்.
எவ்வளவு நாளைக்கு ஒருமுறை கழுவ வேண்டும்?
எவ்வளவு நாளைக்கு ஒருமுறை அல்லது எப்படி கழுவ வேண்டும் என்றெல்லாம் தேவையில்லை, பாட்டில் லேசாக அழுக்காக இருப்பதுபோல உணர்ந்தாலே கழுவிவிடுவது நல்லது. தண்ணீர் பாட்டில் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதே நிபுணர்களின் பொதுவான கருத்து.
வெதுவெதுப்பான தண்ணீரில் ஸ்பான்ச் அல்லது பாட்டில் பிரஷ் உதவியுடன் சோப்பு திரவம் கொண்டு மென்மையாக பாட்டிலை சுத்தம் செய்து பின்னர் உலர வைத்து பயன்படுத்த வேண்டும் என்று சொல்கிறார்கள்.
வினிகர் அல்லது பேக்கிங் சோடா கரைசலைக் கொண்டு மேலும் இன்னும் ஆழமாக சுத்தமாக்கலாம்.
தினமும் எளிமையாக சோப்பு நீர் கொண்டு சுத்தம் செய்வதையும் வாரத்திற்கு ஒரு முறை பேக்கிங் சோடா போன்ற பொருள்களைக் கொண்டு ஆழமாக நன்கு சுத்தம் செய்வதையும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
தினமும் சுத்தம் செய்தாலும் ஒவ்வொரு முறை தண்ணீரை நிரப்பும்போது பாட்டிலின் மூடியை கண்டிப்பாக தண்ணீரில் ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும்.
பாட்டிலின் திறக்கும் பகுதி அல்லது மூடியில் அல்லது உட்புறத்தில் பழுப்பு நிறத்தில் அழுக்குகள், பச்சை நிறத்தில் பூஞ்சைகள் இருந்தால் கண்டிப்பாக தொற்றுகள் வர வாய்ப்புண்டு.
ஒரே பாட்டில் - பல திரவங்கள்
ஒரே பாட்டிலில் தண்ணீர், பழச்சாறுகள், மில்க் ஷேக் போன்றவற்றை மாற்றி மாற்றி நிரப்பி பயன்படுத்தினால் ஒவ்வொருமுறை மாற்றும்போது நன்கு சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். ஏனெனில் சர்க்கரை பானங்களில் உள்ள துளிகளில் பாக்டீரியாக்கள் மிக எளிதாக வளரும்.
தண்ணீருடன் பாட்டிலை வைத்திருப்பது...
முதல் நாள் நிரப்பிய தண்ணீரை சிலர் இரவு முழுவதும் அப்படியே வைத்துவிடுவார்கள். இது முற்றிலும் தவறு என்கின்றனர் நிபுணர்கள்.
அன்றைய நாள் முடிவில் பாட்டிலில் உள்ள தண்ணீரை அப்புறப்படுத்திவிட்டு வெறும் பாட்டிலாகவே வைத்திருக்க வேண்டும். சில மணி நேரத்திற்கு ஒருமுறை பாட்டிலை முழுவதுமாக காலி செய்துவிட்டு லேசாக தண்ணீர் விட்டு சுத்தம் செய்து பின்னர் தண்ணீர் நிரப்புவதும் நல்லது என்று கூறுகின்றனர்.
பாட்டிலில் பூஞ்சை இருந்தாலோ அல்லது விசித்திரமான வாசனையைக் கொண்டிருந்தாலோ அதைக் குடிக்க வேண்டாம். ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களில் மீண்டும் தண்ணீர் நிரப்ப வேண்டாம் என்றும் எச்சரிக்கிறார்கள்.
[பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்திகள் / தகவல்கள் மருத்துவ நூல்கள், இணைய தளங்கள், அனுபவப் பகிர்வுகள் அடிப்படையில் தொகுத்துத் தரப்படுகிற பொதுவான ஆலோசனைகள் மட்டுமே. எந்தவொன்றையும் செயல்படுத்தும் முன் உரிய மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதே நல்லது. எந்த விதத்திலும் ‘தினமணி’ பொறுப்பாகாது.]
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.