ஸ்பெஷல்

எங்கள் குலதெய்வம் ‘பச்சையம்மன்’ வாசகர் குலதெய்வக் கதை - 8!

பச்சையம்மன் குலம் காக்கும் தெய்வம் மட்டுமல்ல திருமணம் கைகூடாதவர்களுக்கு நல்ல இல்லறத் துணையைத் தேடித் தரும் சக்தியும் கொண்டவள் என்பதால்

கோமலீஸ்வரி

எங்கள் குலதெய்வம் பச்சையம்மன். வேலூர் மாவட்டத்தில் குடியாத்தத்தின் எல்லையோரம் வீற்றிருக்கும் அம்மனவள் அழகைக் காண கோடிக்கண்கள் வேண்டும். பச்சையம்மன் என்றால் பசுமையான அம்மன் என்று பொருள்படும்.

பெயருக்கேற்றவாறு பச்சையம்மனின் இருப்பிடத்தில் மலை, ஆறு, நதி போன்ற பசுமையான அம்சங்கள் நிறைந்திருக்கும். அவள் சுயம்பு வாடிவானவள், சாந்த ஸ்வரூபிணி, எப்பொழுதும் உலக நன்மைக்காக தியான நிலையில் அமர்ந்திருப்பாள். தன் பக்தர்களை வற்றாத தனது அருளால் சுண்டியிழுக்கும் காந்த சக்தி அவள். தங்கள் குலதெய்வம் இன்னதெனத் தெரியாதவர்கள் கூட இவளைத் தங்களது குலதெய்வமாக வரித்துக் கொள்வார்கள். ஏனெனில் பச்சையம்மன் குலம் காக்கும் தெய்வம் மட்டுமல்ல திருமணம் கைகூடாதவர்களுக்கு நல்ல இல்லறத் துணையைத் தேடித் தரும் சக்தியும் கொண்டவள் என்பதால் இவளைக் குலதெய்வமாகக் கொள்ளும் விருப்பம் எங்கள் பகுதி மக்களிடையே மிகுதியாக உண்டு.

பச்சையம்மன் வரலாறு:

ஒரு சமயம் திருக்கயிலாய மலை தனில் அன்னை பார்வதி தேவி, மகாதேவரான சிவபெருமானுடன் ஏகாந்தமாய் மகிழ்ந்திருக்கையில் ஆதிசிவன் மிகுந்த மனநிறைவுடன் பூமியை நோக்கி அங்கு என்றும் அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்வுடன் மக்களின் வாழ்க்கை பரிமளிக்க ஆசிர்வதித்தார். ஆனால், அன்னை பார்வதியோ சிறு பிள்ளையாகவே மாறி விட்டார் போலான உவகையுடன் ஏதுமறியாதவர் போல குழந்தமையாக அவரது கண்களைப் பொத்தி பிள்ளை விளையாட்டில் ஈடுபடவே... அடுத்த நொடியில் இந்த உலகமே இருண்டு தட்டாமலை சுற்றியது. கடல் சீற்றத்துடன் கொந்தளித்து அடங்கியது. மிரண்டு போன தேவர்களும், முனிவர்களும், ஏனைய ஜீவராசிகளும் கயிலைக்குத் திரண்டு வந்து தங்களை இந்த இயற்கைச் சீற்றத்திலிருந்து காத்தருளச் சொல்லி சிவனிடம் சரணடைந்தன. அப்போது சிவன் அன்னையின் பிள்ளை விளையாட்டுக் கெடாதபடி நெற்றியில் மூன்றாவதாக ஒரு கண்ணை எழச்செய்து முக்கண்ணராகிப் பின் அந்த மூன்றாம் விழி திறந்து இவ்வுலகைக் காத்து ரட்சித்தார். நெற்றிக்கண் திறந்ததும் உலகே ஒளி வெள்ளத்தில் மூழ்கி பிரகாசமானது. எங்கும் பசுமை கொஞ்சி விளையாட அன்னை பார்வதி அக்கணமே பச்சையம்மனானார்.

பச்சையம்மனாக பார்வதி தேவி, நெற்றிக்கண் திறந்து உலகில் அமைதி மற்றும் சகல ஜீவராசிகளிடையே சமூக நல்லிணக்கத்தை நிறுவியதற்காக மகாதேவரின் பாதங்களின் விழுந்து வணங்கினார்.

பச்சையம்மனும் முனிகளும்...

எல்லாக் குல தெய்வங்களின் கோயில் அமைப்புகளின் படி பச்சையம்மனுக்கும் பரிவார தேவதைகள் உண்டு. பச்சையம்மனின் பரிவார தேவதைகளாக முனீஷ்வரர்களும், சப்தகன்னியர்களையும் கருதி அவள் கோயில் கொண்டுள்ள இடங்களில் எல்லாம் அவர்களுக்கும் சிலை வழிபாடும், பூஜைகளும் செய்யப்படுகின்றன. பச்சையம்மன் உலக அமைதிக்காக பூமியில் பல இடங்களில் தவம் புரிந்தார். அன்னைக்கு ஏவல் செய்ய சிவன் தனது பூதகணங்களையும், சப்த கன்னிகைகளையும் துணையாக அனுப்பி வைத்தார். ஆகவே பச்சையம்மன் செல்லுமிடமெங்கும் பூதகணங்களும், சப்தகன்னியரும் உடன் சென்றனர். காஞ்சியிலிருந்து அருணாசல மலைக்கு அன்னை தவத்துக்காக இடம் பெயர்ந்தபோது அங்கிருந்த உள்ளூர் அரசனொருவன் தேவியுடன் பரிவார தேவதைகள் வரத் தந்திரமாகத் தடை விதித்தான். மன்னனின் தந்திரத்தை தங்கள் விசேஷ சக்தியால் முறித்த பூதகணங்கள் அன்று முதல் வால்முனி, ஜடாமுனி எனும் பெயர்களுடன் முனீஷ்வரர்களாக இந்த உலகில் அருள்பாலிக்கத் தொடங்கினர். வருடம் தோறும் தவறாமல் குடும்பத்துடன் ஒருமுறை பச்சையம்மன் ஆலயம் சென்று பொங்கல் வைத்து அபிஷேகம் செய்து அம்மன் அருள் பெற நாங்கள் தவறுவதில்லை.

இந்த உலகில் எவரொருவரும் தங்களது குலதெய்வங்களை வழிபட மறக்கவே கூடாது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணுவத்தை வைத்து அரசியல் செய்யாதீர்கள்! ராஜ்நாத் சிங்

அஜித்துக்கு வில்லனாகும் பிரபலம்?

இந்து அறநிலையத் துறையில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

ஹரியாணாவில் வாக்குத் திருட்டு ஆதாரமற்றது, நாட்டை அவமதிக்கும் முயற்சி: பாஜக

வாக்குச்சாவடி முகவர்கள் எதிர்க்காதது ஏன்? ராகுலுக்கு தேர்தல் ஆணையம் கேள்வி

SCROLL FOR NEXT