ஸ்பெஷல்

வீணாகும் பழத்தோலில் பாத்திரம் துலக்கும் பெளடர் தயாரிப்பு! அம்மா கேண்டீன்களின் சாமர்த்தியம்!

200 கிலோ பழத்தோல்களை காய வைத்து எடுத்தால் சுமார் 10 கிலோ எடையாகி விடும். இதற்கேற்ப அரைக்கும் போது கிடைக்கும் பொடியின் அளவும் குறையும்.

கஸ்தூரி ராஜேந்திரன்

சமீப காலங்களில் சென்னை அம்மா கேண்டீன்களில் பாத்திரம் துலக்க புதிதாக ஒரு பெளடர் பயன்படுத்தி வருகிறார்கள். சென்னை பழச்சாறு கடைகளில் நாளொன்றுக்கு சுமார் 200 கிலோ பழத்தோல்கள் எஞ்சுகின்றன. இவற்றை வீணாகக் குப்பையில் வீசுவதற்குப் பதிலாக நன்கு காய வைத்து பெளடராக்கினால் அருமையான பாத்திரம் துலக்கும் பெளடர் தயாரிக்கலாம் என்கிறார்கள் அம்மா கேண்டீன்களை பொறுப்பேற்று நடத்தும் சென்னை நகராட்சி அலுவலர்கள். பழச்சாறு கடைகளில் சாறு பிழிந்தபின் வீணாகும் ஆரஞ்சு, மொசாம்பி மற்றும் எலுமிச்சம் பழத்தோல்களை வாங்கிச் சென்று அவற்றை 10 நாட்களுக்கு நன்கு காய வைத்து ஈரத்தன்மை அகன்றதும் அவற்றை மெஷின்களில் அரைத்துப் பொடியாக்கி கடந்த ஒரு மாதகாலமாக அம்மா கேண்டீன்களில் பாத்திரம் துலக்கப் பயன்படுத்தி வருகிறார்கள். முதலில் சில கேண்டீன்களில் மட்டும் நடமுறைப்படுத்தப்பட்ட இந்த வழக்கம் இப்போது படிப்படியாக அனைத்து கேண்டீன்களுக்கும் பரவி வருகிறது.

பொதுவாக சிட்ரஸ் அமிலம் நிறைந்தவையாகக் கருதப்படும் ஆரஞ்சு, மொசாம்பி மற்றும் எலுமிச்சம் பழங்கள் டிஷ்வாஷ் பார்கள் தயாரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தனியார் தொழிற்சாலைகளில்  வேதிப்பொருட்கள் கூட்டில் தயாரிக்கப்படும் பிற டிஷ்வாஷர்களை விட இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் பழத்தோல் டிஷ்வாஷர் பெளடர் பாத்திரங்களில் இருக்கும் கடினமான கறைகளைக் கூட நீக்கக் கூடியதாக இருப்பதால் அவற்றின் பயன்பாடு திருப்தி அளிப்பதாக அம்மா கேண்டீன்களை நடத்தி வரும் மகளிர் தன்னார்வத் தொண்டு நிறுவனப் பெண்கள் கூறி வருகின்றனர்.

இதில் அதிருப்தியான ஒரே விஷயம், பழத்தோல்கள் தினமும் சீராக ஒரே அளவில் கிடைப்பதில்லை என்பதே!

200 கிலோ பழத்தோல்களை காய வைத்து எடுத்தால் சுமார் 10 கிலோ எடையாகி விடும். இதற்கேற்ப அரைக்கும் போது கிடைக்கும் பொடியின் அளவும் குறையும். அதிலும் மழைக்காலம் என்றால் பழத்தோல்கள் கிடைப்பதும், அவற்றைக் காய வைத்து எடுப்பதும் சிக்கலாகி விடும். சில சமயங்களில் வெறும் 60 கிலோ பழத்தோல்கள் மட்டுமே கூட கிடைக்கக் கூடும். அம்மாதிரியான நேரங்களில் அம்மா கேண்டீன்களில் மீண்டும் பழையபடி செயற்கை பாத்திரம் துலக்கும் பொடிகளும், திரவங்களும் பயன்பாட்டுக்கு வந்து விடுகின்றன. இதனால் மீண்டும் அவற்றுக்காக செலவிடும் தொகை அதிகரிக்கும். அதே பழத்தோல் டிஷ்வாஷர்களைப் பயன்படுத்தும் போது செயற்கை பாத்திரம் துலக்கும் பெளடர் மற்றும் லிக்விட்களுக்கு செலவிடும் தொகையை மிச்சமாக்கலாம் என்கிறார்கள் அம்மா கேண்டீன் பெண்கள்.

இப்படிச் சில அதிருப்திகள் இருந்த போதிலும் அம்மா கேண்டீன்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பழத்தோல் டிஷ்வாஷ் பெளடர்கள் ஆரோக்யம் மற்றும் சிக்கன கோணத்தில் பார்க்கையில் வரவேற்கத்தக்க முன்னெடுப்புகளே என்பதில் ஐயமில்லை.

இதை வீட்டில் தினமும் பழங்கள் வாங்கி உண்ணக்கூடிய பழக்கமுடைய இல்லத்தரசிகளும் கூட முயன்று பார்க்கலாமே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தாயகமான சீனா திரும்பிய பாண்டாக்கள்! கண்ணீா் மல்க வழியனுப்பிய ஜப்பானியா்கள்

மாரடைப்புக்குள்ளாவோரில் 25% போ் இளைஞா்கள்!

மியான்மரில் ராணுவ ஆதரவு கட்சி அமோக வெற்றி: அதிபராகும் ராணுவத் தளபதி?

மினியாபொலிஸ் செவிலியா் கொலை: அமெரிக்காவில் வெடித்துள்ள அரசியல் மோதல்

மூன்றாவது பொருளாதார நாடாக இந்தியா மாறும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

SCROLL FOR NEXT