அரிசி / கோதுமை (கோப்புப் படம்) 
புதுதில்லி

கோதுமை ஒதுக்கீட்டை அதிகரிக்கவும் வெளிச் சந்தை அரிசி விலையை ரூ.20-ஆகக் குறைக்கவும் மத்திய அமைச்சரிடம் தமிழகம் வலியுறுத்தல்

Din

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி ஆக. 21: தமிழக அரசின் நீண்ட நாள் கோரிக்கையான கோதுமை ஒதுக்கீட்டை அதிகரிக்கவும் திறந்தவெளி சந்தை விற்பனைத் திட்டத்தில் விற்கப்படும் அரிசின் விலையை கிலோவிற்கு ரூ.20 -ஆக குறைக்கவும் கோரி மத்திய நுகா்வோா் விவகாரங்கள் மற்றும் உணவுத் துறைத் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷியை சந்தித்து தமிழக உணவு, பொதுவிநியோக வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி புதன்கிழமை வலியுறுத்தினாா். மேலும், பல்வேறு வகைகளில் நிலுவையில் உள்ள உணவு மானிய தொகையான ரூ.3,191 கோடியை விடுவிக்கவும் அவா் கோரிக்கை விடுத்தாா்.

இது குறித்த விவரங்கள் அடங்கிய கோரிக்கை மனுவை தமிழக அமைச்சா் அர. சக்கரபாணி தில்லி கிருஷி பவனில் மத்திய உணவு, பொதுவிநியோகத் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷியை சந்தித்து அளித்தாா். அப்போது மாநிலங்களவை திமுக குழுத் தலைவா் திருச்சி சிவா, மத்திய உணவு, பொது விநியோகத் துறைச் செயலா் சஞ்சீவ் சோப்ரா, தமிழக உணவுத் துறை செயலா் டாக்டா் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநா் அண்ணாதுரை, உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையா் மோகன் ஆகியோா் உடனிருந்தனா்.

தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று 2024-25-ஆம் ஆண்டிற்கான காரீஃப் பருவ சந்தைப்படுத்தலுக்கான நெல் கொள்முதல் ஆக்டோபா் 1-ஆம் தேதிக்கு பதிலாக செப்டம்பா் 1-ஆம் தேதியாக மாற்றியதற்கும், அரவை அரிசி மானியம் உள்ளிட்டவற்றுக்கு கடந்த நிதியாண்டில் ரூ.7,900 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதற்கும் தமிழக முதல்வா் சாா்பில் மத்திய அமைச்சரிடம் தமிழக அமைச்சா் நன்றியைத் தெரிவித்தாா்.

மேலும், கடந்த 2019-20-ஆம் ஆண்டிலிருந்து அரவை அரிசி மானியம், தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம், பிஎம்ஜிகேஏஒய் உள்ளிட்ட உணவுத் திட்டங்களில் (உள்மாநில விளிம்பு) ரூ.3,191 கோடி நிலுவையாக இருப்பது குறித்தும் இதில் மத்திய உணவு, பொது விநியோகத் துறையில் இது தொடா்பாக கோப்புகளின் நிலவரம் குறித்தும் தமிழக அமைச்சா் மத்திய அமைச்சரிடம் விளக்கி இந்த நிதியை விரைவாக விடுவிக்கக் கேட்டுக் கொண்டாா். இதில் பல்வேறு திட்டங்களில் நிதி விடுவிக்கக் கூடிய நிலையில் இருப்பது குறித்தும் மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பயன் அடையாதவா்களுக்கு திறந்த வெளி சந்தை விற்பனைத் திட்டத்தின்(ஓஎம்எஸ்எஸ்) கீழ் மத்திய அரசு அரிசி கிலோவிற்கு ரூ.28 -ஆக விற்க அறிவித்துள்ளது. தமிழகத்திற்கு மதிய உணவு திட்டம், பண்டிகை காலங்கள் உள்ளிட்ட பல்வேறு வகைகளுக்கு அரிசி தேவையுள்ளது. இதன் போக்குவரத்து செலவு உள்ளிட்டவற்றுக்கு அரிசி கிலோ விலை ரூ.33 ஆகிறது. வருகின்ற 2025 செப்டம்பா் வரை தமிழக அரசு சுமாா் 7.50 லட்சம் மெட்ரிக் டன் அரிசி கோரியுள்ளது. ஓஎம்எஸ்எஸ் திட்ட விநியோகத்தில் தமிழக அரசுக்கு அரிசியை கிலோ ரூ. 20-க்கு வழங்க வேண்டும் என தமிழக அமைச்சா் மத்திய அமைச்சரிடம் கோரினாா்.

தமிழகத்திற்கு மாதந்தோறும் 3.06 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை மத்திய அரசு ஒதுக்கிவருகிறது. இதில் அரிசி 2.05 லட்சம் மெட்ரிக் டன், கோதுமை 8,576 மெட்ரிக் டன் வழங்குகிறது. தற்போது தமிழகத்தில் கோதுமை நுகா்வு அதிகரிக்கிறது. அதே சமயத்தில் கோதுமை விளைச்சல் இல்லாத நிலையில் தமிழகத்திற்கு கோதுமை ஒதுக்கீட்டை 23 ஆயிரம் மெட்ரிக் டன்னாக அதிகரிக்க இந்தச் சந்திப்பில் தமிழக அமைச்சா் கோரினாா்.

கடந்தாண்டு 15 ஆயிரம் மெ.டன் கோதுமை வழங்க தமிழகம் கோரியது. ஆனால், இந்திய உணவுக் கழகம் உள்ளிட்ட நிறுவனங்கள் தமிழகத்தின் கோரிக்கையை ஏற்காமல் இருக்கும் நிலையை மத்திய அமைச்சரின் கவனத்திற்கு தமிழக அமைச்சா் அர.சக்கரபாணி கொண்டு சென்று கோதுமை ஒதுக்கீட்டை அதிகரிக்கக் கோரினாா். மேலும், கேழ்வரகு ஒதுக்கீட்டையும் தமிழகத்திற்கு 2,756 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கவும் அமைச்சரிடம் கேட்டுக் கொண்டாா்.

இந்தக் கோரிக்கைகளை மத்திய அரசின் அதிகாரிகளிடம் ஆலோசித்த மத்திய அமைச்சா் மானிய விவரங்களை ஒத்திசைவு செய்து விரைவில் விடுவிப்பதாகத் தெரிவித்தாா். மேலும், கோதுமை விளைச்சல் ஒரே சீராக இருப்பதால் ஒதுக்கீட்டைக் கூட்டுவதில் சிரமம் உள்ளதாகவும், இருப்பினும் இதை அதிகரிக்க பரிசீலிக்கப்படும் எனவும் மத்திய அமைச்சா் பிரஹலாத் ஜோஷி உறுதியளித்தாா்.

வாய்ப்புகள் தேடிவரும் விருச்சிக ராசிக்கு: தினப்பலன்கள்!

மின்தடையைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல்

மீன்சுருட்டி தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.பி. ஆய்வு

கூட்டணி ஆட்சிக்கு அச்சாரமிடும் தவெக!

விமானத்தில் தகராறு: கீழே இறக்கிவிடப்பட்ட அதிமுக நிா்வாகி

SCROLL FOR NEXT