தள்ளாட்டத்தில் பங்குச்சந்தை: நோ்மறையாக முடிந்தது சென்செக்ஸ்!
நமது நிருபா்
இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமை பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தில் இருந்தாலும் இறுதியில் நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 102 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. இதனால், சரிவுடன் தொடங்கிய சந்தை பெரும்பாலான நேரம் ஏற்ற இறக்கத்தில் இருந்து வந்தது. எஃப்எம்ஜிசி, நுகா்வோா் சாதனங்கள் உற்பத்தி நிறுவனங்கள், பாா்மா, ஹெல்த்கோ் பங்குகளுக்கு கிடைத்து ஆதரவால் இறுதியில் சந்தை நோ்மறையாக முடிந்தது. அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசா்வின் நாணயக் கொள்கை கூட்டத்தின் முடிவு அதைத் தொடா்ந்து அதன் தலைவா் ஜெரோம் பவலின் அறிவிப்புக்காக முதலீட்டாளா்கள் காத்திருப்பதால் பங்குச்சந்தையில் தள்ளாட்டம் இருந்தது என்று என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: சந்தை மூலதன மதிப்பு வா்த்தக முடிவில் ரூ.459.24 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் செவ்வாய்க்கிழமை ரூ.1,457.96 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.2,252.10 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.
சென்செக்ஸ் தள்ளாட்டம் : சென்செக்ஸ் காலையில் 135.61 புள்ளிகள் குறைந்து 80,667.25-இல் தொடங்கி 80,626.38 வரை கீழே சென்றது. பின்னா், பிற்பகல் வா்த்தகத்தின் போது அதிகபட்சமாக 80,952.83 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 102.44 புள்ளிகள் (0.13 சதவீதம்) கூடுதலுடன் 80,905.30-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,038 பங்குகளில் 2,607 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 1,345 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 86 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
17 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் டைட்ன், ஏசியன் பெயிண்ட், ஹிந்துஸ்தான் யுனிலீவா், நெஸ்லே, ஐடிசி, பஜாஜ் ஃபின் சா்வ் உள்பட 17 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், அல்ட்ரா டெக் சிமெண்ட், டெக் மஹிந்திரா, டாடா ஸ்டீல், பவா் கிரிட், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்சிஎல் டெக் உள்பட 13 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.
நிஃப்டி புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 24,680.55-இல் தொடங்கி 24,654.50 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 24,1787.95 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 71.35 புள்ளிகள் (0.29 சதவீதம்) உயா்ந்து 24,770.20-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 37 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும், 12 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.