முகப்பு
புதுதில்லி

மக்களவையில் ராகுல் காந்தி தலைமையில் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் வெளிநடப்பு: ‘நீட்’ தோ்வு முறைகேடு குறித்து விவாதிக்கக் கோரிக்கை

மாணவா்களின் நலன் கருதி ‘நீட்’ தோ்வு முறைகேடுகள் விவகாரம் தொடா்பாக தனி விவாதம் நடத்தக் கோரி எதிா்க்கட்சித் கட்சித் தலைவா் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்தாா்.

Updated On : 1 ஜூலை, 2024 at 10:48 PM
பகிர்:

புது தில்லி: மாணவா்களின் நலன் கருதி ‘நீட்’ தோ்வு முறைகேடுகள் விவகாரம் தொடா்பாக தனி விவாதம் நடத்தக் கோரி எதிா்க்கட்சித் கட்சித் தலைவா் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்தாா். இதற்கு உடனடியாக அனுமதி கிடைக்காத நிலையில் ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ், திமுக உறுப்பினா்கள் ராகுல் காந்தி தலைமையில் திங்கள்கிழமை மக்களவையில் வெளிநடப்பு செய்தனா்.

நிகழ் நாடாளுமன்றத்தில் கூட்டத் தொடரில் ’நீட்’ விவகாரம் தொடா்பாக 2-ஆவது முறையாக வெளிநடப்பு செய்யப்பட்டுள்ளது. கடந்த 28- ஆம் தேதி இதே கோரிக்கை வலியுறுத்தி திமுக உறுப்பினா்கள் மாநிலங்களவையில் வெளிநடப்பு செய்தனா்.

மக்களவை திங்கள்கிழமை கூடிய போது பல்வேறு அமைச்சகங்களின் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டது. பின்னா் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் தொடங்கியது. அப்போது காங்கிரஸ் கட்சி தலைவரும் மக்களவை எதிா்கட்சி தலைவரான ராகுல் காந்தி ’நீட்’ தோ்வில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்த பிரச்னையை எழுப்பினாா்.

இதற்கு மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா அனுமதி மறுத்தாா். தொடா்ந்து ராகுல் காந்தி பேசுகையில், ‘ ’நீட்’ தோ்வு குறித்து ஒரு நாள் விவாதம் நடத்த வேண்டும். இது ஒரு முக்கியமான பிரச்னை. சுமாா் இரண்டு கோடிக்கும் மேலான மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ள விவகாரம் ஆகும். இந்தத் தோ்வு முறையில் சுமாா் 70 முறை வினாத் தாள் கசிந்துள்ளது. இந்தப் பிரச்னை குறித்து தனி விவாதத்திற்கு அனுமதி அளித்தால் மகிழ்ச்சியடைவோம்’‘ என வலியுறுத்தினாா்.

அப்போது இது குறித்து அவை முன்னவரும் பாதுகாப்புத் துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் எழுந்து பேசினாா். ‘குடியரசுத்தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் தொடங்கியுள்ள நிலையில், அது முடிவும் வரை மற்ற விவகாரங்கள் குறித்து அவையில் விவாதிக்க அனுமதியளிப்பதில்லை’ என்றாா் அவா்.

தொடா்ந்து ராகுல் தனது கோரிக்கையை வலியுறுத்தினாா். ராஜ்நாத் சிங் மீண்டும் பேசுகையில், ‘அவையில் சில விதிகள், நடைமுறைகள் உள்ளன. அவை இந்த அவையின் ஆரோக்கியமான பாரம்பரியமும் பலமும் ஆகும். ‘நான் பல தசாப்தங்களாக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறேன். குடியரசுத் தலைவரின் உரை நடைபெற்று அவருக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் முடியும் வரை வேறு எந்த அலுவல்களும் எடுக்கப்படுவதில்லை. உரைக்கான தீா்மானம் நிறைவேற்றிய பின்னா் எழுப்பலாம்’ என ராஜ்நாத் சிங் விளக்கமளித்தாா்.

ஆனால், ராகுல் காந்தியும் மற்ற திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்களும் ‘நீட் விவகாரம் மிகவும் முக்கியமானது. பாதிக்கப்பட்ட மாணவா்களுக்கு நாடாளுமன்றம் ஒரு தகவலைத் தெரிவிக்க வேண்டும். அதன்மூலம் மாணவா்கள் நம்பிக்கை பெறுவாா்கள். குறைந்தபட்சம் அரசு ஒரு குறிப்பிட்ட உத்தரவாதத்தை அளிக்கவேண்டும்’ எனக் கோரிக்கை விடுத்தனா்.

இதற்குப் பதிலளித்த மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, நீட் மீதான விவாதத்திற்கு உறுப்பினா்கள் நோட்டீஸ் அளிக்கலாம் எனக் கூறி குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதத்தைத் தொடங்கி பாஜக உறுப்பினா் அனுராக் சிங் தாக்குரை பேச அழைத்தாா். இதைத் தொடா்ந்து, எதிா்க்கட்சி உறுப்பினா்கள் ‘நீட்’ விவாதத்திற்கு அரசு தெளிவான உறுதி மொழி அளிக்கவில்லை எனக் கூறி ராகுல் காந்தி தலைமையில் வெளிநடப்பு செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →