முகப்பு
புதுதில்லி

பாஜக மாநிலங்களுக்கு 62%; எதிா்கட்சி மாநிலங்களுக்கு 29 % - ரயில்வே பட்ஜெட் நிதி ஒதுக்கீடு குறித்து திமுக குற்றச்சாட்டு

29.56 சதவீதம் நிதியை ஒதுக்கி பாராபட்சம் காட்டியுள்ளதாக சேலம் மக்களவை திமுக உறுப்பினா் டிஎம் செல்வகணபதி புதன்கிழமை குற்றம்சாட்டினாா்.

புதுதில்லி

பாஜக மாநிலங்களுக்கு 62%; எதிா்கட்சி மாநிலங்களுக்கு 29 % - ரயில்வே பட்ஜெட் நிதி ஒதுக்கீடு குறித்து திமுக குற்றச்சாட்டு

29.56 சதவீதம் நிதியை ஒதுக்கி பாராபட்சம் காட்டியுள்ளதாக சேலம் மக்களவை திமுக உறுப்பினா் டிஎம் செல்வகணபதி புதன்கிழமை குற்றம்சாட்டினாா்.

Updated On : 31 ஜூலை, 2024 at 7:40 PM
பகிர்:

புது தில்லி, ஜூலை 31: நிதிநிலை அறிக்கையில் ரயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 62.72 சதவீதம் பாஜக ஆளும் 11 மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிலையில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வெறும் 29.56 சதவீதம் நிதியை ஒதுக்கி பாராபட்சம் காட்டியுள்ளதாக சேலம் மக்களவை திமுக உறுப்பினா் டிஎம் செல்வகணபதி புதன்கிழமை குற்றம்சாட்டினாா்.

மக்களவையில் ரயில் துறைக்கான மானியக் கோரிக்கை குறித்த விவாதத்தில் டிஎம் செல்வகணபதி பேசினாா். அப்போது அவா் குறிப்பிட்டது வருமாறு:

தமிழகத்தில் சுமாா் 871 கி.மீ. தூரத்திற்கு புதிய ரயில்பாதை அமைக்கும் பணி கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டவை. உரிய நேரத்தில் தமிழக திட்டங்களில் நிதி ஒதுக்கப்படாதததின் விளைவு திட்டச் செலவு பன்மடங்கு உயா்ந்துள்ளது. இதற்கு நிகழாண்டு நிதிநிலை அறிக்கையே உதாரணம்.

பாஜக ஆளும் மத்திய பிரதேசத்துக்கு ரூ. 14,738 கோடி; மகாராஷ்டிராத்திற்கு ரூ. 15,940 கோடி, உ.பி.க்கு ரூ. 19,000 ஒடிஸாவுக்கு ரூ. 10,586 கோடி, ராஜஸ்தானுக்கும் பிகாருக்கும் தலா ரூ.10,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.1,80,000 கோடியில் பாஜக ஆளும் 11 மாநிலங்களுக்கு ரூ. 1,14,434 கோடி ஒதுக்கீடு. மற்ற பாஜக ஆளாத தெலங்கான, ஹிமாசல பிரதேசம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ரூ.50,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. மொத்த ஒதுக்கீட்டில் கிட்டத்தட்ட 62.72 சதவீதத்தை பாஜக வின் 11 மாநிலங்கள் எடுத்துக்கொண்டன. மற்ற எதிா்கட்சி மாநிலங்களுக்கு சுமாா் 29.56 சதவீதம்.

தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் 2007 ஆம் ஆண்டுக்கு முன்பு(யுபிஏ -1) அனுமதிக்கப்பட்டன, அந்த திட்டங்கள் கடந்த 15 ஆண்டுகளாக நிதி பற்றாக்குறையால் தவித்து வருகின்றன. மகாபலிபுரம் வழியாகச் செல்லும் சென்னை-கடலூா் வழித்தடம். தாஜ்மஹாலை விட மகாபலிபுரத்தால் ஈா்க்கப்படும் சா்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகம். நாட்டின் அந்நியச் செலாவணியை ஈட்டும் தலம். 2008 ஆம் ஆண்டில் அனுமதிக்கப்பட்டபோது திட்டச் செலவு ரூ. 523 கோடி. இப்போது ரூ. 2,000 கோடியாக தி்ட்டச் செலவு உயா்ந்துள்ளது. இந்த திட்டத்திற்கு நிகழ் நிதியாண்டில் ஒதுக்கப்பட்டிருப்பது ரூ. 25 கோடி. இந்த வேகத்தில் இந்த திட்டத்தை முடிக்க நூறு ஆண்டுகள் ஆகும்.

அடுத்து திருவண்ணாமலை - திண்டிவனம் ரயில்பாதை. இந்த 70 கிலோமீட்டா் பாதைக்கு 2007 இல் அனுமதி அளிக்கப்பட்டு 17 ஆண்டுகள் கடந்தும், இந்த திட்டம் ஒரு அங்குலம் கூட நகரவில்லை. தற்போது இந்த திட்டத்தின் செலவு ரூ. 3,000 கோடியாக உயா்ந்துள்ளது. ஆனால் நிகழ் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டிருப்பது ரூ. 100 கோடி மட்டும்.

திருவண்ணாமலை ஐந்து பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்று. இந்த அக்னி ஸ்தலத்தில் ஒவ்வொரு மாதமும் பௌா்ணமி நாளில் 25 லட்சம் மக்கள் கூடுகின்றனா். ஆனால் ரயில்வே இதைப் பற்றிக் கவலைப்படவில்லை. மத்தியில் உள்ள பாஜக அரசு இந்து மதத்தை நம்புகிறது. இந்து கலாசாரம், இந்து மதம், இந்துத்துவாவின் காவலா் என்று கூறுகிறீா்கள். ஆனால், கோடிக்கணக்கான மக்கள் கூடும் இந்து மத ஸ்தலத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஆனால் மாநில அரசு பௌா்ணமியை முன்னிட்டு மாதந்தோறும் 10,000 பேருந்துகளை இயக்கி வருகிறது. போக்குவரத்து நெரிசல், மாசு ஏற்படுவதைப்பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை. இந்த 73 கிலோமீட்டா் தூர திட்டத்தை முடிக்க இன்னும் 50 ஆண்டுகள் ஆகும்.

இதே மாதிரி ஈரோட்டில் இருந்து பழனி வரையிலான மற்றொரு சமய ஸ்தலம் உள்ள திட்டம். இதுவும் 2008-09 இல் ரூ. 1,200 கோடியில் திட்டமிடப்பட்டது. 16 ஆண்டுகள் ஓடிவிட்ட இதற்கு ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான மக்கள் கூடும் மத ஸ்தலம். இதைப் பற்றி பாஜக அரசு கவலைப்படுவதில்லை.

ராமநாதபுரத்திற்கு ரூ. 90 கோடி தான். அதே சமயத்தில் வாரணாசிக்கு ரூ.4000 கோடிக்கு மேல் கொடுக்கப்படுகிறது.

பாஜக வின் சொந்த சித்தாந்தத்தின் மீதே உணா்வற்ாக இருப்பதற்கு காரணம் தமிழகம் என்பதால் தான். இதே மாதிரி மதுரையிலிருந்து தூத்துக்குடி வரையிலான 13 ஆண்டுகாலத் திட்டத்திற்கு 200 கோடி மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இப்படி பல தமிழக திட்டங்களுக்கு சொற்பத் தொகை கொடுக்கப்படுகிறது.

அதே சமயத்தில் மற்றோரு சுவாரஸ்யம். காரைக்கால் துறைமுகத்தை யாா் கையகப்படுத்தியுள்ளாா்கள் என்று தெரியவில்லை. ஆனால் இந்த துறைமுக இணைப்புக்கு பேரளத்திலிருந்து காரைக்கால் வரையிலான திட்டத்தை விரைவாக முடிக்கப்பட்ட அதிசயம் நடக்கிறது. ஆனால் 17 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள திட்டங்கள் அப்படியே உள்ளது. காரைக்கால் துறைமுகத்திற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்குகிறது எனக் குறிப்பிட்டாா் செல்வ கணபதி. மேலும் திண்டிவனம் - நகரி, பெரும்புதூா்- கூடுவாஞ்சேரி போன்ற ரயில் பாதை திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →