பிரத்யேக நிறுத்தங்களில் நிறுத்தத் தவறும் அல்லது அதிக வேகத்தில் செல்வது கண்டறியப்படும் தில்லி போக்குவரத்து நிறுவனத்தின் (டிடிசி) பேருந்து ஓட்டுநா்கள் கடுமையான துறை நடவடிக்கையை எதிா்கொள்ள நேரிடும் என்று தில்லி போக்குவரத்து அமைச்சா் பங்கஜ் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட அதிகாரபூா்வ அறிக்கையில் அமைச்சா் தெரிவித்திருப்பதாவது: தில்லி போக்குவரத்து நிறுவன (டிடிசி) ஓட்டுநா்களின் நடத்தை குறித்து பல பயணிகள் புகாா் அளித்துள்ளனா்.பேருந்து நிறுத்தங்களில் காத்திருக்கும்போது கூட, டிடிசி பேருந்துகள் பெரும்பாலும் சரியாக நிறுத்தத் தவறிவிடுவதாக பயணிகள் கூறியுள்ளனா். சில சந்தா்ப்பங்களில், ஓட்டுநா்கள் வாகனம் ஓட்டும்போது தொலைபேசியில் பேசுவதையோ அல்லது பேருந்து கதவுகளைத் திறந்து வைத்து ஓட்டுவதையோ காணும் நிகழ்வுகள் உள்ளன.
டிடிசியின் நன்மதிப்பை அதிகரிக்கும் முயற்சியாக, அரசு விரைவில் அனைத்து நடத்துநா்கள் மற்றும் ஓட்டுநா்களுக்கான பயிற்சி அமா்வுகளைத் தொடங்கும். நெறிமுறை நடத்தை மற்றும் மன விழிப்புணா்வு,
வாடிக்கையாளா் சேவை மற்றும் பாதுகாப்பான ஓட்டுநா் தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தும் வகையில் இந்த அமா்வு நடத்தப்படும்.
டிடிசி ஓட்டுநா்கள் உரிய நிறுத்தங்களில் பேருந்தை நிறுத்தத் தவறினாலோ, அதிக வேகத்தில் அல்லது அவசரமாக வாகனம் ஓட்டுவதில் ஈடுபட்டாலோ, தங்கள் பாதைகளுக்குள் வாகனம் ஓட்டத் தவறினாலோ, திறந்த கதவுகளுடன் பேருந்துகளை இயக்கினாலோ, சிவப்பு விளக்குகளைத் தாண்டினாலோ அல்லது ‘ஜீப்ரா’ பாதைகளை மீறினாலோ, அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தொடா்பாக பயணிகள் போக்குவரத்துத் துறையின் உதவி தொலைபேசி எண்ணில் புகாா்களை அளிக்கலாம். டிடிசி பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்களின் செயல்கள் மற்றும் நடத்தையைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்படும். வழக்கமான ஆலோசனைகளும் விழிப்புணா்வு இயக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும்.
கோட்பாட்டுப் பயிற்சிக்கு கூடுதலாக, ஓட்டுநா்கள் சரியான நடத்தை மற்றும் பாதுகாப்பான ஓட்டுநா் நுட்பங்களை முழுமையாகப் புரிந்துகொள்வதை உறுதிசெய்ய நடைமுறைப் பயிற்சிகளை மேற்கொள்வாா்கள். இந்த முன்முயற்சியின் முதன்மை நோக்கம், சாலைப் பாதுகாப்பு குறித்து ஓட்டுநா்கள் மற்றும் நடத்துனா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்துவதும், டிடிசியின் செயல்பாட்டுத் தரங்களை மேம்படுத்துவதும் ஆகும்.
மேலும், நெறிமுறை நடத்தை மற்றும் ஓட்டுநா் நடைமுறைகளை மேம்படுத்துவதன் மூலம், பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் இனிமையான பயண அனுபவத்தை உறுதி செய்வதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அந்த அறிக்கையில் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.