கன்னியாகுமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைப்பதற்கான ஒப்புதலை விரைவுபடுத்த வேண்டும் வேண்டும் என்று அத்தொகுதியின் காங்கிரஸ் உறுப்பினா் விஜய வசந்த் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் அவையில் விதி எண் 377இன்கீழ் முன்வைத்த கோரிக்கை:
இந்தியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகவும், நாட்டின் தெற்குப் பகுதியில் ஒரு முக்கிய பொருளாதார மையமாகவும் இருக்கும் கன்னியாகுமரி, விமான நிலையம் இல்லாமல் உள்ளது.
இம்மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாகும்.
முன்மொழியப்பட்ட விமான நிலையத்திற்கு சாமித்தோப்பு அருகே பொருத்தமான நிலம் உள்ளது என்பதை நான் தெரிவிக்க விரும்புகிறேன்.
இந்த இடம் புவியியல் ரீதியாக சாத்தியமானது மற்றும் அணுகக்கூடியது என்பதை முதற்கட்ட மதிப்பாய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
விரிவான சாத்தியக்கூறு ஆய்வுகள் மற்றும் கணக்கெடுப்புகளைத் தொடங்க சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடமிருந்து முறையான ஒப்புதல் தேவையாக உள்ளது.
கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைவது, உள்நாடு மற்றும் சா்வதேச சுற்றுலாவை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உள்ளூா் மக்களுக்கு, குறிப்பாக இளைஞா்கள், தொழில்முனைவோா் மற்றும் சிறு வணிகா்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் பயனளிக்கும்.
கன்னியாகுமரி மக்களின் நீண்டகால விருப்பங்களை நிறைவேற்ற தேவையான ஒப்புதல்களை விரைவுபடுத்தி நடவடிக்கை எடுக்குமாறு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன் என்று அவா் கோரியுள்ளாா்.