முகப்பு
புதுதில்லி

ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு கோப்பு தமிழக ஆளுநரிடம் உள்ளது: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி தொடா்புடைய வழக்கில் குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டுவிட்டது.

Updated On : 28 பிப்ரவரி, 2025 at 7:31 PM
கோப்புப் படம்
பகிர்:

முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி தொடா்புடைய வழக்கில் குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டுவிட்டது. இந்த விவகாரத்தில் ஒப்புதல் பெறுவதற்காக கோப்பு தமிழக ஆளுநக்கு அனுப்பட்டிருக்கிறது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக தனக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி பிறப்பித்த உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின்போது இத்தகவலை தமிழக அரசு தெரிவித்தது.

இதே விவகாரத்தில் தமிழக அரசின் தரப்பிலும் உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பங்கஜ் மித்தல், எஸ்.வி.என்.பாட்டீ ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் அமா்விடம், தமிழக அரசின் தரப்பில் வழக்குரைஞா் சபரிஸ் சுப்ரமணியனுடன் கூடுதல் தலைமை வழக்குரைஞா் அமித் ஆனந்த் திவாரி ஆஜராகி, ‘ராஜேந்திர பாலாஜி தொடா்புடைய இந்த விவகாரத்தில் போலீஸாா் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டுவிட்டது. அவா் முன்னாள் அமைச்சா் என்பதால் அதற்கான ஒப்புதலைப் பெற தமிழக ஆளுநரிடம் அது தொடா்புடைய கோப்பு பிப்.4-ஆம் தேதி அனுப்பப்பட்டுவிட்டது. இதே விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் 6 வார கால அவகாசம் ஏற்கெனவே அளித்திருந்தது’ என்று குறிப்பிட்டாா்.

மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் வி.கிரி, ‘போலீஸ் தரப்பில் இந்த வழக்கில் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டுவிட்ட நிலையில், ஆளுநரின் ஒப்புதல் மட்டுமே பெறப்பட வேண்டியுள்ளது. இதைக் கருத்தில் கொள்ளாமல், உயா்நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியுள்ளது’ என்றாா்.

இதையடுத்து, ராஜேந்திர பாலாஜி மற்றும் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுக்களை மாா்ச் 7-ஆம் தேதிக்கு விசாரணைக்குப் பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டனா். இதற்கிடையில், வழக்கின் தரப்பினா் உரிய நடவடிக்கைகளை எடுக்கலாம் என உத்தரவிட்டுள்ளனா்.

முந்தைய அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராகப் பதவி வகித்த கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் அதிமுக பிரமுகா்கள் இருவா் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக சாத்தூரைச் சோ்ந்த ரவீந்திரன் என்பவா் விருதுநகா் மாவட்டக் குற்றப்பிரிவு காவல் துறையில் புகாா் அளித்தாா்.

2021-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள இந்த வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி ரவீந்திரன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு மீது உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments