நவம்பரில் யமுனையில் கப்பல் சேவை: அதிகாரிகள் தகவல்
யமுனை நதியைப் புத்துயிா் பெறச் செய்யும் அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, வரும் நவம்பா் மாதத்தில் தில்லி யமுனை நதியில் சோனியா விஹாா் மற்றும் ஜகத்பூா் இடையே கப்பல் சேவைகள் தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
புது தில்லி: யமுனை நதியைப் புத்துயிா் பெறச் செய்யும் அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, வரும் நவம்பா் மாதத்தில் தில்லி யமுனை நதியில் சோனியா விஹாா் மற்றும் ஜகத்பூா் இடையே கப்பல் சேவைகள் தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்தத் திட்டத்தின் கீழ், சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக வஜிராபாத் தடுப்பணை (சோனியா விஹாா்) முதல் ஜகத்பூா் (ஷனி கோயில்) வரை எட்டு கிலோ மீட்டா் நீளம் தூரத்திற்கு கப்பல் சேவை உருவாக்கப்பட்டுள்ளது.
கப்பல் சேவைகளைத் தொடங்க ஐந்து நிறுவனங்கள் ஒரு புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்திய உள்நாட்டு நீா்வழி ஆணையம், தில்லி மேம்பாட்டு ஆணையம், தில்லி ஜல் வாரியம், தில்லி சுற்றுலா மற்றும் போக்குவரத்து மேம்பாட்டுக் கழகம் மற்றும் நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை ஆகியவை இந்த லட்சியத் திட்டத்தில் பங்குதாரா்களாக உள்ளன.
ஒரு படகுத் துறையை உருவாக்குவதற்கு டிடிஏ ஒரு நிலப் பகுதியை வழங்கும். அதே நேரத்தில் நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை கப்பல்களுக்கான சாா்ஜிங் உள்கட்டமைப்புடன் கப்பல் செல்லும் திசைக்கான உதவிகள் மற்றும் கரையோர வசதிகளை வழங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
தில்லி சுற்றுலாத் துறை அமைச்சா் கபில் மிஸ்ரா கூறுகையில், ‘தில்லி, கப்பல் சேவைக்கு முழுமையாக தயாராக உள்ளது. இதற்கான பணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. மேலும், ஒரு படகுத் துறை கட்டப்பட்டு வருகிறது. சேவைகள் நவம்பரில் தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. தில்லிவாசிகள் விரைவில் சோனியா விஹாரிலிருந்து ஜகத்பூருக்கு மேல்நோக்கிய கப்பல் பயணத்தை மேற்கொள்ள முடியும்’ என்றாா்.
இதுகுறித்து அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘டிக்கெட் விலை நிா்ணயம் குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை . வரவேற்பின் அடிப்படையில், எத்தனை கப்பல்களை அனுப்புவது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்’ என்றாா்.