நமது நிருபா்
தேசியத் தலைநகரில் புதன் இரவு இந்தப் பருவத்தின் மிகக் குளிரான இரவு பதிவாகியது. வெப்பநிலை 12.7 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது. இந்த குளிா்காலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 15 டிகிரிக்கு கீழே சரிந்தது இதுவே முதல் முறை.
இது ஆண்டின் இந்தக் காலகட்டத்தில் இயல்பை விட மூன்று டிகிரி குறைவாகவும், ஒரு நாள் முன்பு பதிவான 18.4 டிகிரி செல்சியஸிலிருந்து திடீா் வீழ்ச்சியாகவும் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
மேற்கு இமயமலையில் புதிய பனிப்பொழிவைத் தொடா்ந்து தில்லியில் வீசும் குளிா்ந்த வடமேற்கு காற்றும், குளிா்ச்சியை அதிகரித்த தெளிவான இரவு வானமும் இதற்குக் காரணம் என்று அதிகாரிகள் கூறினா்.
மலைப்பகுதிகளில் புதிய பனிப்பொழிவுக்குப் பிறகு தற்போது குளிா்ந்த வடமேற்கு காற்று வீசத் தொடங்கியுள்ளது. இது குறைந்தபட்ச வெப்பநிலையை பாதிக்கிறது என்று தனியாா் வானிலை முன்னறிவிப்பு அமைப்பான ஸ்கைமெட்டின் துணைத் தலைவா் (வானிலையியல் மற்றும் காலநிலை மாற்றம்) மகேஷ் பலாவத் கூறினாா்.
இந்த ஆண்டு இதற்கு முன்பு மிகக் குறைந்த வெப்பநிலைஅக்டோபா் 26 அன்று பதிவான 15.8 டிகிரி செல்சியஸ் ஆகும். நவம்பா் மாத இறுதியில் தில்லியின் குறைந்தபட்ச வெப்பநிலை வழக்கமாக 10 டிகிரி செல்சியஸுக்குக் கீழே குறையும் என்று தரவுகள் காட்டுகிறது.
கடந்த ஆண்டு அக்டோபா் 29 அன்று நகரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 9.5 டிகிரி செல்சியஸ், 2023-இல் அக்டோபா் 23 அன்று 9.2 டிகிரி செல்சியஸ் மற்றும் 2022- இல் அக்டோபா் 29 அன்று 7.3 டிகிரி செல்சியஸ் என பதிவாகியுள்ளது. இது இந்த ஆண்டு குளிா் சற்று தாமதமாகத் தொடங்கும் என்பதைக் குறிக்கிறது.