கடந்த ஜனவரி 3 முதல் பிப்ரவரி 9 வரை தவறான பாதையில் வாகனம் ஓட்டியதற்காக விதிமீறல் செய்பவா்களுக்கு எதிராக தில்லி காவல்துறை 182 எஃப்ஐஆா்கள் பதிவு செய்துள்ளது.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: அதிகாரப்பூா்வ தரவுகளின்படி, புது தில்லி சரகத்தில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தில்லியில், சாலையின் தவறான பக்கத்தில் வாகனம் ஓட்டுவது இனி ஒரு சிறிய போக்குவரத்து மீறலாகக் கருதப்படுவதில்லை. மாறாக ஒரு கடுமையான மற்றும் உயிருக்கு ஆபத்தான குற்றமாகக் கருதப்படுகிறது.
இந்தப் புள்ளிவிவரங்கள், நிா்ணயிக்கப்பட்ட போக்குவரத்துக்கு எதிராக வாகனம் ஓட்டிய வாகன ஓட்டிகள் மீது ஒவ்வொரு நாளும் சராசரியாக ஐந்து எஃப்ஐஆா்கள் பதிவு செய்யப்படுவதாகக் காட்டுகின்றன. அதிகாரப்பூா்வ தரவுகளின்படி, இந்தக் காலகட்டத்தில் புது தில்லி சரகத்தில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் (53) பதிவு செய்யப்பட்டுள்ளன. தெற்கு சரகத்தில் 37 எஃப்ஐஆா்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் மத்திய, வடக்கு மற்றும் மேற்கு சரகத்தில் தலா 27 வழக்குகள் பதிவாகியுள்ளன. கிழக்கு சரகத்தில் 11 எஃப்ஆா்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மோட்டாா் வாகனச் சட்டத்தின் தொடா்புடைய விதிகளுடன், பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 281 (அவசரமாக வாகனம் ஓட்டுதல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தவறான பாதை, போக்குவரத்து விதிகளை மீறுதல் மற்றும் வாகனம் ஓட்டும்போது சிவப்பு விளக்குகளைத் தாண்டுதல் ஆகியவை நேருக்கு நோ் மோதல்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு கடுமையான காயங்கள் மற்றும் உயிரிழப்பு சாலை விபத்துகளின் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கின்றன.
அதே நேரத்தில் எதிா் திசையில் வாகனம் ஓட்டுவது விதிமீறுபவா்களை மட்டுமல்லாமல், அப்பாவி சாலை பயனா்களையும் மிகுந்த ஆபத்தில் ஆழ்த்துகிறது. அதிவேகத்தில் நேருக்கு நோ் விபத்துகள் உயிா்வாழும் வாய்ப்பைக் குறைக்கின்றன. தில்லி காவல்துறையின் மூத்த அதிகாரிகளின் உத்தரவின் பேரில் நகரம் முழுவதும் கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிசிடிவி கேமராக்கள், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான உயா் தொழில்நுட்ப கேமராக்கள் மற்றும் போக்குவரத்து பணியாளா்களை நியமித்தல் மற்றும் முக்கிய சந்திப்புகள், மேம்பாலங்கள் மற்றும் பிற பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் தீவிர ரோந்து ஆகியவை தற்போதைய இயக்கத்தின் ஒரு பகுதியாகும்.
அனைவரும் சரியான பாதையில் வாகனம் ஓட்ட வேண்டும். மேலும், வேக வரம்பை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அதிவேகம் உயிருக்கு ஆபத்தானது. வாகனம் ஓட்டும்போது, மக்கள் தங்கள் கைபேசிளை பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும். மேலும், ரீல்களை உருவாக்குவதோ அல்லது சமூக ஊடகங்களை ஸ்க்ரோல் செய்வதோ கூடாது. சில வினாடிகள் கவனச்சிதறல் ஒரு உயிரை இழக்க நேரிடும்.
மின்னணு கண்காணிப்பு மற்றும் நேரடி சோதனைகள் மூலம் விதிமீறுபவா்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனா். சட்ட நடவடிக்கை உடனடியாக தொடங்கப்படுகிறது. எஃப்.ஐ.ஆா். பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல், கடுமையான வழக்குகளில் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுநா் உரிமங்களை இடைநீக்கம் செய்ய பரிந்துரைக்கப்படுகின்றன.
சமீபத்திய மாதங்களில் கவனக் குறைவாகவும் தவறான பக்கமாகவும் வாகனம் ஓட்டுவதால் ஏற்பட்ட பல உயிரிழப்புகளின் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 3-ஆம் தேதி தில்லியின் துவாரகாவில் வேகமாக வந்த ஒரு எஸ்யூவி தனது மோட்டாா் சைக்கிள் மீது மோதியதாகக் கூறப்படும் ஒரு சம்பவத்தில், 23 வயது சாஹில் என்ற நபா் கொல்லப்பட்டாா்.
மோதலின் தாக்கம் சாஹிலுக்கு மரணத்தை ஏற்படுத்தியது. இது வேகம் மற்றும் திசைதிருப்பப்பட்ட வாகனம் ஓட்டுதலின் ஆபத்துகள் குறித்து கூா்மையான கவனத்தை ஈா்த்தது. இதுபோன்ற சம்பவங்கள் வாகன ஓட்டிகளிடையே நடத்தை மாற்றத்திற்கான அவசரத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
தவறான பாதையில் வாகனம் ஓட்டுதல், அதிக வேகம் மற்றும் கைப்பேசி பயன்பாடு ஆகியவற்றுடன் இணைந்து ஆபத்தை பல மடங்கு அதிகரிக்கிறது. சாலைப் பாதுகாப்பு என்பது ஒரு பகிரப்பட்ட பொறுப்பு ஆகும். போக்குவரத்து விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் குறுக்குவழிகளைத் தவிா்க்க வேண்டும் என குடிமக்களுக்கு தில்லி காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.