பறக்கும் பொருள்களை வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி செய்வதற்கான மையமாக நகரத்தை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ட்ரோன் கொள்கையை வகுக்க தில்லி அரசு 3 போ் கொண்ட குழுவை அமைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து அரசு அதிகாரிகள் கூறியதாவது: தகவல் தொழில்நுட்ப (ஐடி) துறை செயலாளா் தலைமையிலான இந்தக் குழுவில், ஐஐடி தில்லியைச் சோ்ந்த நிபுணா்கள் உள்பட நிபுணா்கள் உதவுவாா்கள். இந்தக் குழுவில் தில்லி காவல்துறை அதிகாரி மற்றும் உள்துறை சிறப்புச் செயலாளா் ஆகியோா் உறுப்பினா்களாக உள்ளனா்.
தற்போது, உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம், குஜராத் மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களின் ட்ரோன் கொள்கைகள் தேசியத் தலைநகரின் தேவைகளுக்கு ஏற்ற கொள்கையின் முறைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
தில்லியின் ட்ரோன் கொள்கை, நகரத்தை ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, ட்ரோன்களை வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி செய்வதற்கான மையமாக எவ்வாறு மாற்றுவது என்பதில் கவனம் செலுத்தும். ட்ரோன்களைப் பயன்படுத்துவது அதன் ஒரு பகுதியாக மட்டுமே இருக்கும்.
கடந்த ஆண்டு நவம்பரில் தில்லி செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பைத் தொடா்ந்து, தெலுங்கானா மற்றும் இமாச்சலப் பிரதேசத்தைப் போலவே நகரத்திற்கும் ட்ரோன் கொள்கையை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா, தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டாா்.
பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நோக்கங்களுக்காக ட்ரோன்களைப் பயன்படுத்துவதைத் தவிர, வான்வழி ஆய்வுகள், மேப்பிங், விவசாயம், பேரிடா் மேலாண்மை மற்றும் விநியோகங்கள் போன்ற பிற துறைகளிலும் மிகப்பெரிய சாத்தியக்கூறுகள் உள்ளன.