சித்தர்கள் கண்ட விஞ்ஞானம்-தத்துவம்- சாமி சிதம்பரனார்; பக்.160 ரூ.160; அழகு பதிப்பகம், சென்னை-49; )044-2650 2086.
"தமிழில் எல்லா மக்களுக்கும் பயன்படக்கூடிய வைத்தியக் கலைதான் சித்த வைத்தியக் கலை. சித்தர்களின் வைத்தியக் கலைக்கு நிகரான கலையுடன் வேறு எந்த வைத்தியக் கலையையும் ஒப்பிட முடியாது. பொதுமக்கள் நோயின்றி வாழ்வதற்காகவே சித்தர்கள் தமது வைத்தியக் கலையை வளர்த்தனர்' என்றும்; "சித்தர்களின் நூல்களிலே பரிபாஷைகள் பல காணப்படுகின்றன. அவற்றைப் படிக்கும் புலவர்களோ, பொதுமக்களோ அவற்றின் உண்மைப் பொருளைக் கண்டறிய முடியாது. பரம்பரையாக சித்தர் நூல் பயிற்சி
உள்ளவர்கள்தாம், அவற்றின் உண்மைப் பொருளைக் கண்டறிய முடியும்' என்றும் தனது முன்னுரையில் கூறும் சாமி சிதம்பரனார், சித்தர் நூல்களின் உண்மைப் பொருள்களைக் காண மக்கள் முயல வேண்டும் என்கிறார்.
சித்தர்களின் சிறப்புகளைப் பல்வேறு பழம்பெரும் நூல்களிலிருந்து எடுத்து விளக்கியுள்ளார். சங்க இலக்கியங்களில் ஆழங்காற்பட்ட சாமி சிதம்பரனார், சித்தர் இலக்கியங்களிலும் ஆழங்காற்பட்டிருக்கிறார் என்பதை இந்நூல் தெளிவாக்குகிறது.
சித்தர்களின் சிறப்புகள், அவர்களின் விஞ்ஞான ஆராய்ச்சிகள், சிந்தர்களின் கொள்கைகள் போன்றவற்றையும் இந்நூல் எடுத்துரைக்கிறது. பாம்பாட்டிச் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், அகப்பேய் சித்தர் தொடங்கி பதினொரு சித்தர்கள் பற்றியும், திருவள்ளுவர் இயற்றியது எனக் கூறப்படும் "ஞான வெட்டியான்', ஒளவை அருளிய "ஒளவைக் குறள்' பற்றியும் இரு கட்டுரைகள் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.