திருஇன்னம்பர் திருத்தலம் 
பரிகாரத் தலங்கள்

தெய்வ தரிசனம்... கல்விச் செல்வம் அருளும் திருஇன்னம்பர் எழுத்தறிநாதர்!

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வழிபடக்கூடிய தலமாக இத்தலம் விளங்குகிறது.

என்.எஸ். நாராயணசாமி

காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில் 45-வது தலமாக விளங்கும் திருஇன்னம்பர் திருத்தலம், குழந்தைகளுக்குச் சிறு வயதில் பள்ளியில் சேர்ப்பதற்கு முன் வித்யாரம்பம் செய்யவும், மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும் வழிபடக்கூடிய தலமாக விளங்குகிறது.

சிவஸ்தலம் பெயர்: திருஇன்னம்பர்

இறைவன் பெயர்: எழுத்தறிநாதர், ஐராவதேஸ்வரர்

இறைவி பெயர்: சுகந்த குந்தளாம்பிகை, சௌந்தரநாயகி

இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் நான்கு பதிகங்களும், திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும் அருளியுள்ளனர்.

எப்படி செல்லலாம்?

கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலைக்குச் செல்லும் சாலையில், புளியஞ்சேரி என்னும் ஊருக்கு வடக்கே திருப்புறம்பயம் போகும் வழியில், சுமார் 3 கி.மீ. தூரத்தில் இந்த சிவஸ்தலம் இருக்கிறது. இங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் திருப்புறம்பியம் என்ற பாடல்பெற்ற மற்றொரு ஸ்தலம் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து திருப்புறம்பியம் செல்லும் நகரப் பேருந்துகள், திருஇன்னம்பர் வழியாகச் செல்கின்றன.

ஆலய முகவரி

அருள்மிகு எழுத்தறிநாதர் திருக்கோயில்,
இன்னம்பர் அஞ்சல்,
கும்பகோணம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 612 303.

இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

காவிரியின் வடகரையில் உள்ள இத்தலம், ஒரு பாஸ்கர ஷேத்திரமாக விளங்குகிறது. அம்பர் என்றால் ஆகாயத்தைக் குறிக்கும். ஆகாயத்தில் வலம் வரும் சூரியன், தான் இழந்த தன்னுடைய ஆற்றலைப் பெறவேண்டி, இத்தல இறைவனை பூஜித்துள்ளான். சூரியன் பூஜித்ததால், இத்தலம் இன்னம்பர் என்று பெயர் பெற்றது. பங்குனி மாதம் 13, 14, 15 தேதிகளில், சூரிய ஒளி காலையில் சிவலிங்கத் திருமேனி மீது படுகிறது. இதனை சூரிய பூஜை என்று கொண்டாடுகின்றனர்.

தேவேந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற வெள்ளை யானை, இங்குள்ள தடாகத்தில் நீராடி இறைவனை வழிபட்டு தன் சாபத்தைப் போக்கிக்கொண்டதால், இங்குள்ள தீர்த்தம் ஐராவத தீர்த்தம் என்றும் இறைவன் ஐராவதேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தல இறைவனை சூரியன், சந்திரன், ஐராவதம் என்ற யானை, அகஸ்திய முனிவர் ஆகியோர் வழிபட்டுள்ளனர். தல விருட்சமாக பலா மரமும் செண்பக மரமும் உள்ளன.

அகஸ்திய முனிவர், இத்தல இறைவனிடம் தமிழ் இலக்கணம் பயின்றதாகத் தல புராணம் கூறுகிறது. மேலும், இப்பகுதியை ஆண்டுவந்த மன்னனிடம் கணக்கராகப் பணியாற்றி வந்தார் சுதஸ்மன் என்ற ஆதிசைவர். கோயில் கட்டுமானப் பணிகளை மேற்பார்வை செய்துவந்த இவரிடம், வரவு செலவு கணக்கு குறித்து அரசன் ஒருமுறை விசாரித்தான். சுதஸ்மன் ஒப்படைத்த கணக்கில் அரசருக்கு ஐயம் ஏற்பட்டது. தன் மீது வீண் பழி வருமோ என்று கவலைப்பட்ட சுதஸ்மன், இத்தல இறைவனிடம் வேண்டினார். ஈசன், சுதஸ்மன் உருவில் மன்னரிடம் சென்று, கணக்கில் மன்னருக்கு ஏற்பட்ட ஐயத்தைப் போக்கினார். அதனாலேயே, இத்தல இறைவனுக்கு எழுத்தறிநாதர் என்ற பெயரும் ஏற்பட்டது.

குழந்தைகளுக்குச் சிறு வயதில் பள்ளியில் சேர்ப்பதற்கு முன் வித்யாரம்பம் செய்ய இத்தலத்துக்குப் பக்தர்கள் வருகிறார்கள். இறைவன் சன்னதி முன் நெல்லைப் பரப்பி அதில் எழுதுவதைத் தொடங்குவார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க இத்தல இறைவனை வழிபடுவது நல்ல பலனைத் தரும்.

கோவில் அமைப்பு

ஆலயம், கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரத்துடன் விளங்குகிறது. கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன், விசாலமான கிழக்கு வெளிப் பிராகாரத்தைக் காணலாம். இங்கு முதலில் நாம் காண்பது விநாயகர், அதன்பின் உள்ள நந்தி மண்டபம்.

இத்தலத்தில் கொடிமரம் இல்லை. இந்தக் கிழக்கு வெளிப் பிராகாரத்தில், வலதுபுறம் தெற்கு தோக்கிய சன்னதியில் அம்பாள் சுகந்த குந்தளாம்பிகை எழுந்தருளியுள்ளாள். இந்த அம்பாளே பிரதான அம்பாளாகும். மற்றொரு அம்பாள் சன்னதியும் இங்குள்ளது. அம்பாளின் பெயர் நித்யகல்யானி என்கிற சௌந்தரநாயகி.

நந்தி மண்டபத்துக்குப் பின்னால் உள்ள இரண்டாவது நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றால், இத்தல இறைவன் எழுத்தறிநாதர் அருட்காட்சி தருகிறார். மூலவர் பெரிய நீண்டு உயர்ந்த பாணத்துடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார்.

இறைவன் சன்னதி விமானம், கஜப்பிரஷ்ட அமைப்பு கொண்டது. கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, காட்சிகொடுத்த நாதர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் காணப்படுகின்றனர். பாலசுப்பிரமணியருக்குத் தனிச் சன்னதி உள்ளது. கல்லில் உருவாக்கப்பட்ட நடராஜர் சிலையும் கோஷ்டத்தில் உள்ளது. அழகான பைரவர் மூர்த்தமும் காண வேண்டிய ஒன்றாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்களிலேயே மிகப் பயங்கர நிலநடுக்கம் எது? ஏன்?

விபத்தில் சிக்கிய மயிலை 7 நிமிடத்தில் வனத்துறையிடம் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்: வைரலாகும் விடியோ!

ம.பி.யில் 23,000 பெண்கள், சிறுமிகளைக் காணவில்லை!

கடலும் கடல் காற்றும்... அனிதா சம்பத்!

இன்று முக்கிய அறிவிப்பு? முதல்வர் ஸ்டாலினுடன் ஓ. பன்னீர்செல்வம் சந்திப்பு!

SCROLL FOR NEXT