செய்திகள்

நவக்கிரக தோஷம் விலக செய்யுங்க நவராத்திரி வழிபாடு!

தினமணி

 
குடும்பத்தில் துஷ்ட சக்தி அகன்று நல்ல சக்தி சூழ வேண்டும் என்றால் வீட்டில் கடவுளின் வழிபாடு நிச்சயம் தேவை. அதற்கு ஒட்டுமொத்த பூஜை  என்பது நவராத்திரி  ஆகும். நமக்கு ஒரு காரியம் நடக்க தந்தையை விட தாயிடம் கேட்பது வழக்கம். அதுபோல் நமக்கு வேண்டியதை நம் தாய் பரமேஸ்வரி மற்றும் அவளின் அவதாரங்களில்  உள்ள நம் இஷ்ட தெய்வத்திடம் கேட்கும் பொழுது கட்டாயம் நமக்குக் கிட்டும். 

நவ + ராத்திரி. இதில் நவ என்றால் 9 ஆகும். ஒன்பது முக்கிய சக்தி கொண்ட செவ்வாயின் ஆதிக்கம் பெற்ற எண். இந்த எண் ஜாதகத்தில் நவக்கிரகங்களை, நவராத்திரி, நவ  பாஷாணக் கட்டு, குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் 9 மாதகள், நவரசத்தை, நவ சக்தியை அடங்கிய நவ துர்க்கை, நவரத்தினம், நவ கன்னிகை உடலில் உள்ள நவ   துவாரங்கள் (ஓட்டைகள்) என்று அடுக்கிக்கொண்டு போகலாம். இவற்றில் நவராத்திரி வரலாறு மற்றும் அவற்றின் பெருமை பற்றிச் சிறு தொகுப்பைப் பார்ப்போம்.

நவராத்திரி என்றவுடன் அனைவருக்கும் முக்கியமாகக் குழந்தைகளுக்கும் மற்றும் பெண்களுக்கும் மகிழ்ச்சிகரமான திருவிழாவாகும். வீட்டில் மாக்கோலம் இட்டு, தோரணம்  கட்டி வீடே கலகலப்பாக மங்கள கடாட்சமாக இருக்கும். நம் தாத்தா பாட்டி காலத்தில் ஏழை பணக்காரன் பாகுபாடின்றி, யாரும் அழைக்காமல் அனைவரின் வீட்டுக்கும்  சென்று தாம்பூலம் வாங்கி வருவோம். தங்கள் வீடு தேடி வருபவர்களை லக்ஷ்மியாகவும், துர்கையாகவோ, சரஸ்வதியாகவோ மற்றும் அம்பாளின் அவதாரமாகவும் நினைத்து இன்புற்று வரவேற்பார்கள். 

பொருளாதார மற்றும் அவரவர் நிலைகளுக்கு ஏற்ப இக்காலங்களில் கொலு அழைப்பு என்பது கொஞ்சம் குறைவுதான். தற்காலத்தில் நம்மை யாராவது கூப்பிட்டால் தான்  போக வேண்டும் என்று இருப்போம். இன்றும் எனக்குத் தெரிந்த சிலர் வீட்டில் பழங்கால முறைப்படி நவராத்திரி பத்து நாட்களும் யாராவது மங்கை மற்றும் சிறுகுழந்தைகள்  வீட்டுக்கு வந்தால் அவர்களுக்கு உணவு மற்றும் தாம்பூலம் கொடுத்து சந்தோஷமாக அனுப்பிவைக்கிறார்கள்.

நவராத்திரி என்பது வருடத்தில் ஒன்று மட்டும் என்று நினைத்திருக்கிறோம். ஆனால் மொத்தம் ஒரு வருடத்திற்கு நான்கு நவராத்திரி வழிபாடு இந்தியாவின் பல  மாநிலங்களில் கோவில்களிலும் வீடுகளிலும் கொண்டாடப்படுகிறது. அவை அனைத்துமே ஒன்பது நாட்கள் சிறப்பு வழிபாடு கொண்டது. அவை ஆஷாட நவராத்திரி, சாரதா  நவராத்திரி, சியாமளா நவராத்திரி, வசந்த நவராத்திரிகள் ஆகும். 

ஆனி மாதம் அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் ஆஷாட நவராத்திரி ஆகும். இந்த நவராத்திரியின் தெய்வம் ஸ்ரீ வாராஹி தேவி. இவள் நம்  உடலில் இருக்கும் ஆறு ஆதார சக்கரத்தில் நெற்றியில் விளங்கும் ஆக்ஞா சக்கரத்திற்கு உரியவள். அவளை நினைத்து உலக வளமைக்காகவும், தானியங்கள் செழிக்கவும்,  செல்வங்கள் பெருகவும், எதிர்ப்புகள் அகலவும் அம்பிகையை வழிபாடு செய்வார்கள். இன்றும் தஞ்சையில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

தை மாதம் அமாவாசைக்குப் பிறகு வரும் பிரதமை முதல் வரும் ஒன்பது நாட்கள் சியாமளா நவராத்திரி அடக்கும். மதங்க முனிவரின் தவப்புதல்வியாக அவதரித்தருளியவள்  ஞான வடிவானவள் அன்னை ஸ்ரீ ராஜமாதங்கி என்னும் ஸ்ரீ சியாமளா தேவி தான் இந்த நவராத்திரிக்கு முக்கிய கடவுள். இந்த தாயினை வணங்கினால் கல்வி, இசை,  இலக்கியம், நடனம் மற்றும் சகலகலைகளும் நமக்குக் கிட்டும். 

பங்குனி மாதம் அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஸ்ரீ ராம நவமியுடன் முடியும் வரை இந்த ஒன்பது நாட்கள் வசந்த நவராத்திரி என்னும் வழிபாடு  நடைபெறும். வசந்த நவராத்திரி 9 நாட்கள் கொண்டாடினால் உலகம் க்ஷேமம் என்றும் 15 நாட்கள் (அமாவாசை - பெளர்ணமி வரை) கொண்டாடினால் வேண்டிய வரங்கள்  கிட்டும் என்று புராணம் கூறப்படுகிறது.

இந்த மாதங்களிலும் நல் வாழ்வையும் அளித்து, நோய் எதிர்ப்பு சக்தி பெற்று, ஆன்மீக சக்தியுடன் கூடிய நீண்ட நல்வாழ்வு வாழ அருளக் கூடியவள் அம்பிகை மட்டுமே.  பொதுவாக வட மற்றும் தென் இந்தியாவில் சிற்சில ஆலயங்களில் மட்டுமே நடத்தப்படக் கூடியது. வசந்த நவராத்திரி அம்பிகையின் வடிவமாகிய ராஜச்யாமளா;  ராஜமாதங்கீஸ்வரி எனும் வடிவத்தைப் போற்றுவதாக அமையக் கூடியது. மதுரை ஆலயத்திலும் வசந்த நவராத்திரி வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். ஆலயங்களில்  மேரு எனும் ஸ்ரீ சக்ர வடிவம் இருக்குமேயானால், அங்கு வசந்த நவராத்திரி பொதுவாகக் கொண்டாடப்படும்.

புரட்டாசி மாதம் அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் நவமி முடியும் வரை ஒன்பது நாட்கள் சாரதா நவராத்திரி என்றும் வட நாட்டில் துர்கா பூஜையாகவும்  கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் காலையில் சிவ மற்றும் விஷ்ணு வழிபாடும் மாலையில் அம்பிகைகளான 18 கைகளை உடைய துர்கா, சரஸ்வதி, லட்சுமி மற்றும்  அம்பாளின் அவதாரங்களை வழிபட்டால் - வீட்டில் நோய் வராமல் காக்கப்படும், குழந்தைகளுக்குக் கல்வி செல்வம் கிட்டும், கேட்டது கிடைக்கும், எதிலும் வெற்றிவாகை  சூட்டலாம், ஒன்பது கிரக தோஷங்கள் நீங்கும், எதிர்மறையான விளைவுகள் மற்றும் கெட்ட சக்திகள் எதுவும் அண்டாது. கோள்களால் வரக்கூடிய துன்பங்களைத் தடுக்கும்  ஆற்றல் கொண்டது இந்த பூஜை. இதனால் வீட்டில் நேர்மறை ஆற்றல் ஏற்படும். நாம் சிறிய தொகுப்பாக நவராத்திரி உருவான கதையைப் பார்ப்போம்.

உருவான கதை: ரம்பனுக்கும் அரக்கிக்கும் பிறந்தவன்தான் மகிஷன். அதனால்தான் மனித உடலும் எருமை தலையுடன் தோன்றினான். மகிஷன், பிரம்மனை நினைத்து  மேருமலையில் பல வருடம் தவம் செய்து, “தனக்கு யாராலும் மரணம் ஏற்படக்கூடாது, அப்படியே நேர்ந்தால் அது பெண்ணால் தான் இருக்கவேண்டும்" என்ற வரத்தைப்  பெற்றான். பெண்கள் பூ போல் இருப்பதால் அவர்களுக்கு அதிபலம் இருக்காது தன்னைக் கொன்று விட முடியாது என்று மகிஷன் நினைத்து இந்த வரத்தைப் பெற்றான். அந்த  உயிர் பயம் இல்லாமல் மகிஷன் தேவலோகத்தை புரட்டிப்போட்டன். அவன் அட்டகாசம் தாங்கமுடியாமல் தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டார்கள்.

விஷ்ணுவும் சிவனிடம் முறையிட்டார். சிவன் தன் பலத்தால் மூன்று நிற கண்களுடன் கூடிய "சந்தியாதேவி" என்ற சக்தியை உருவாக்கினார். அவளும் அந்த மகிஷனை  "போருக்கு வா" என்று அழைத்தால் வரமாட்டான் என்று அறிந்து ஒரு சூட்சம வேலை செய்தால். சந்தியா மகிஷனின் பார்வையில் விழும்படி நடந்து சென்றாள். சக்தியின்  அழகில் மயங்கிய மகிஷன், சக்தியை திருமணம் செய்யத் தூது விட்டான். இதைக் கேட்ட சந்தியாதேவி, "தன்னை யார் போர் புரிந்து வீழ்த்துகிறார்களோ அவரைதான் நான்  திருமணம் செய்வேன்" என்று மகிஷனின் தூதுவனிடம் சொல்லி அனுப்பிவிட்டால். அவளின் சூட்சியில் மகிஷன் மாட்டிக்கொண்டு சந்தியா தேவியுடன் ஒன்பது நாட்கள்  போர்புரிந்தான். பிறகு பத்தாவது நாளில் தேவி, மகிஷடைய எருமை தலையை தன் சக்கரத்தால் வெட்டி சாய்த்தாள். அவன் இறந்ததைக் கண்டு தேவலோகமும் பூலோகமும்  போற்றி புகழ்ந்து, அவரை "மகிஷாசுரமர்த்தினி" என்று போற்றினார்கள். ஒன்பது நாள் போர் பிறகு 10வது நாளில் வெற்றியினை விஜயதசமி என்று கொண்டாடப்பட்டது.

வால்மீகி இராமாயணத்தில் புரட்டாசியில் வரும் விஜய தசமி அன்று இராமன், இராவணனுடன் போர் செய்ய உகந்த நாள் என்று அறிவிக்கவைப்பதாகவும் மற்றும்  மகாபாரதத்தில் பாண்டவர்கள் அஞ்ஞானவாசம் முடிந்து அர்ச்சுனன்தான் ஒரு ஆண்டு காலமாகக் கட்டி வைத்திருந்த ஆயுதங்களை எல்லாம் விஜய தசமி அன்று மீண்டும்  எடுத்து உயிர்ப்பித்துக்  கொண்டதாகவும்  புராணங்கள் கூறப்படுகிறது.

கொலுவில் பொம்மைகள் மண்ணால் பூஜிப்பது நல்லது என்பதற்கு ஒரு கதை உண்டு. சுரதா என்ற அரசன் போர்புரிவதை விருப்பாதவர் அதை அறிந்த எதிரிகள் அவரை  அழிக்க போர் புரிந்தனர். அவர்களிடம் போர் புரிந்து ஜெயிப்பது என்பது ஆகாத காரியம் என்று அரசன் தன் குருநாதரிந்தம் ஆலோசனை கேட்டார். அவரும் அதற்கு ஒரு தீர்வு  சொன்னார். அவரின் ஆலோசனைப் படி மணலால் காளியை செய்து வணங்கி தவம் புரிந்தார். தவத்தின் பலனாக காளிதேவி அரசனுக்கு எதிரிகளை வெல்லும் சக்தியை அருளினாள். இவற்றில் சூட்சமம் பஞ்சபூத தத்துவத்தில் தத்துவம் கொண்ட தண்ணீரையும், மணலையும் இணைத்து கடவுளின் உருவம் படைத்தது பூஜித்ததால் சகல  வளங்களும், அருள் மற்றும் வெற்றிகளும் கிட்டும் என்பது உண்மை. அதேபோல் மண் சிவலிங்கம் விஷேம். இவற்றின் அடிப்படையில் நாம் கொலுவிற்கு மண்ணால் ஆன  உருவ கடவுள் பொம்மைகளை வைத்து வணங்குகிறோம்.

நவகிரகங்களை குறிக்கும் 9 படியும் வைப்பது சிறந்தது. எல்லாராலும் ஒன்பது படிகள் வைக்க முடியாது என்பதால் முப்பெரும் தேவியை குறிப்பதாக  3 படிகளும், சக்தியின்  சக்கரமான 5 படிகளும், மற்றும் சப்தமாதர்களை குறிக்கும் 7 படிகளும் அமைக்கலாம்.  படிகளில் என்ன பொம்மைகள் வைப்பார்கள் என்று பார்ப்போம். விக்னங்கள் தீர்க்கும்  விநாயகரை முதலில் கொலுப்படியில் வைத்த பிறகுதான் மற்ற பொம்மைகளை வைக்க வேண்டும் என்று  பல நூற்களில் கூறப்பட்டுள்ளது. ஓரறிவு உயிர் இனமான புல்,  செடி, கொடி போன்ற தாவர வகையும், நண்டு, வண்டு, விலங்குகள், பறவைகள், தேவர்களின் உருவங்கள், நவக்கிரக பகவான்கள், விநாயகர் முருகர், பிரம்மா, விஷ்ணு,  சிவன், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி மற்றும் செட்டியார் பொம்மை அவரவர் முறைப்படி படிக்கட்டுகளில் வைப்பார்கள். இவரில் மற்றவர்களுக்கு புரியும்படி எதாவது புராண  தத்துவ கதை கொண்ட பொம்மைகள் வைப்பது சிறந்தது இன்றும் அவற்றினை பலர் பின்பற்றுகின்றனர். 

இந்த கொலுப்படி தத்துவப்படி உலகம் என்பது மாயை அவற்றில் நாம் புழுவாய் பிறந்து, மரமாகவும் பிறந்து, மனிதராகவும் பிறந்து, கடைசியில் முக்தி என்ற மோட்சத்தை  அடைய போராடுகிறோம் என்பது நவராத்திரி முக்கிய அம்சம் ஒன்பது சக்திகள் என்பது முப்பெரும் சக்திகளில், ஒவ்வொரு சக்திக்கும் மும்மூன்று அம்சங்கள்  கொண்டவர்கள். அவர்களை முதல் மூன்று நாட்கள் துர்க்கையின் வழிபாடு, இடை மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு மற்றும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு  செய்யப்படும். இவர்களை வெவ்வேறு அவதாரத்தில் அதாவது துர்க்கை என்பவள் மகேஸ்வரி, கெளமாரி, வராகி, நவதுர்கை என்றும் லட்சுமி என்பவள் மகாலெட்சுமி,  வைஷ்ணவி, இந்திராணி, அஷ்ட லக்ஷ்மி என்றும் மற்றும் சரஸ்வதி என்பவள்  நாரசிம்மி, சாமுண்டியாகவும் மண் பொம்மை உருவங்களை வைத்து வழிபட்டால் அனைத்து கிரக தோஷமும் அகலும் மற்றும் குடும்பம் மகிழ்ச்சியில் மிதக்கும்.

தங்களுக்குத் தெரிந்த ஸ்லோகங்கள், விநாயகர் துதி, சௌந்தர்ய லஹரி, அபிராமி அந்தாதி, துர்க்காஷ்டகமும், லட்சுமி அஷ்டோத்திரமும், சரஸ்வதி அஷ்டோத்திரம், லலிதா  சகஸ்ரநாமம் அர்ச்சனை செய்து நவக்கிரக நாயகர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் நவதானியச் சுண்டல் மற்றும் பழங்கள் வைத்து பூஜை செய்யலாம். தங்களால்  முடிந்ததை ஏழை குழந்தைகளுக்கு என்றும் மற்றும் பெண்களுக்கு தேவையானவற்றை வாங்கி தாம்பூலத்தில் வைத்து ஒன்பது நாலும் கொடுக்கலாம். நாம் எவ்வளவு இல்லாதவர்களுக்கு கொடுக்கிறோமோ அதற்கு நூறு மடங்கு பகவான் திருப்பி தந்து விடுவான். இந்த முறையை செய்துதான் பாருங்களேன்.

- ஜோதிட சிரோன்மணி தேவி

Whats app: 8939115647
Email: vaideeshwra2013@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

பூப்பூத்ததை யார் பார்த்தது?

அதிரடி... அதிதி ராவ் ஹைதரி...

ஐபிஎல் தொடரில் முதல் வீரர்... எம்.எஸ்.தோனியின் புதிய சாதனை!

காதலரைப் பிரிந்தாரா ஸ்ருதி ஹாசன்?

SCROLL FOR NEXT