முகப்பு
கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

என் குழந்தையைச் சரியாகக் கவனித்துக் கொள்ளவில்லையா?: ட்விட்டரில் வெகுண்டு எழுந்த சானியா மிர்சா!

இதைப் பற்றி நீங்களோ, இந்த உலகமே அக்கறை கொள்ளவேண்டியதில்லை. யாரை விடவும்...

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:16 AM
பகிர்:

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா.

ஆட்டம் தொடங்குவதற்குச் சில நேரங்கள் முன்பு பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் தனது மனைவி சானியா மிர்சாவுடன் ஒரு ஷீஷா பாரில் நண்பர்களுடன் இருந்ததாக விடியோவும் செய்தியும் வெளியாகின. சமூகவலைத்தளங்களில் கசிந்த அந்த விடியோ பெரிய சர்ச்சையை உருவாக்கிவிட்டது. பாகிஸ்தான் அமைச்சர் ஷிரீன், சோயிப் மாலிக்கின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தார். 

இதையடுத்து அந்த விடியோ குறித்து சோயிப் மாலிக், சானியா மிர்சா ஆகிய இருவரும் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்கள்.

விடியோ குறித்து சோயிப் மாலிக் கூறியதாவது: எப்போதுதான் பாகிஸ்தான் ஊடகம், நம்பகத்தன்மையுடனும் பொறுப்புடனும் நடந்துகொள்ளப் போகின்றன? என் நாட்டுக்காகச் சர்வதேச கிரிக்கெட்டில் 20 வருடங்கள் உழைத்தபோதும் என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நான் விளக்க வேண்டியிருப்பது வேதனைக்குரியது. அந்த விடியோக்கள் 13-ம் தேதி எடுக்கப்பட்டவை. 15-ம் தேதியில் அல்ல என்று கூறியுள்ளார்.

ஆனால் சானியா மிர்சா விளக்கம் அளித்ததோடு, பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக்குடன் விவாதத்திலும் ஈடுபட்டார். 

உங்கள் குழந்தையை ஷீஷா பாருக்கு அழைத்துச் சென்றுள்ளீர்கள். அது, ஆபத்தானதல்லவா? மேலும் குப்பை உணவுகள் விளையாட்டு வீரர்களுக்கு நல்லதல்ல, இதெல்லாம் தாயாகவும் விளையாட்டு வீராங்கனையாகவும் உள்ள உங்களுக்குத் தெரியாதது அல்ல என்று கேள்வியெழுப்பினார் வீணா மாலிக்.

இதைக் கண்டு கடுப்பான சானிய மிர்சா, மிகவும் கோபமான தொனியில் பதில்களை அளித்தார். அவர் கூறியதாவது: வீணா, என்னுடைய குழந்தையை ஷீஷா இடத்துக்கு அழைத்துச் செல்லவில்லை. மேலும், இதைப் பற்றி நீங்களோ, இந்த உலகமே அக்கறை கொள்ளவேண்டியதில்லை. யாரை விடவும் என் மகனை நன்குக் கவனித்துக்கொள்கிறேன். அடுத்ததாக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் டயட்டிசியன் நான் கிடையாது. பாகிஸ்தான் வீரர்கள் எப்போது தூங்குவார்கள், என்ன சாப்பிடுவார்கள் என்பதை அறிய அவர்களுடைய தாய், ஆசிரியர் பொறுப்புகளிலும் நான் இல்லை. உங்களுடைய அக்கறைக்கு நன்றி என்று கூறியதோடு ட்விட்டருக்கு இடைவேளை விடுவதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் தங்களை விடியோ எடுத்ததோடு நிறுத்தாமல், அதைச் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டதற்கும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.