வங்கதேச அணிக்கு எதிராக ஆஸி. அணி ரன்கள் குவிப்பு: 150 ரன்கள் எடுத்து வார்னர் அசத்தல் ஆட்டம்!
139 பந்துகளில் 150 ரன்களை எட்டினார் வார்னர். ஒருநாள் கிரிக்கெட்டில்...
ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசம் ஆகிய இரு அணிகளுக்கு எதிரான உலகக் கோப்பைக்கான ஆட்டம் நாட்டிங்கமில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. ஆஸி. அணியில் மூன்று மாற்றங்கள். ஸ்டாய்னிஸ், ஸாம்பா, நாதன் கோல்டர் நைல் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளார்கள். வங்கதேச அணியில் இரு மாற்றங்கள். சபிர் ரஹ்மான், ருபெல் ஹுசைன் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.
புள்ளிகள் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி, 8 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் வங்கதேச அணி 5 புள்ளிகளுடன் 5-ம் இடத்திலும் உள்ளன.
இன்றைய ஆட்டத்திலும் வங்கதேச அணி அசத்தும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ஆஸி. தொடக்க வீரர்கள் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்தினார்கள். முதல் 10 ஓவர்கள் விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா. இதன்பிறகு வார்னர் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். 55 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். இதையடுத்து கேப்டன் ஆரோன் ஃபிஞ்சும் சிக்ஸர், பவுண்டரிகள் அடித்து அரை சதத்தை எட்டினார். கடைசியில் அவர் 53 ரன்களில் செளம்யா சர்கார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 30 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 168 ரன்களை அடைந்தது ஆஸ்திரேலியா. இதனால் கடைசி 20 ஓவர்களில் ரன் குவிக்கும் வேகம் மேலும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
33-வது ஓவரில், 110 பந்துகளில் சதத்தை எட்டினார் வார்னர். இது அவருடைய 16-வது ஒருநாள் சதம். இந்த உலகக் கோப்பையில் அவர் அடிக்கும் 2-வது சதம் இது. இதற்கு முன்பு பாகிஸ்தானுக்கு எதிராக 107 ரன்கள் எடுத்தார்.
வார்னருக்கு நல்ல இணையாக விளங்கிய கவாஜா, 50 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். சதமடித்த பிறகு விரைவாக ரன்கள் சேர்த்தார் வார்னர். இதனால் ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் கடகடவென உயர்ந்தது. 139 பந்துகளில் 150 ரன்களை எட்டினார் வார்னர். ஒருநாள் கிரிக்கெட்டில் 6-வது முறையாக 150 ரன்களுக்கும் அதிகமாக அவர் எடுத்துள்ளார்.
43 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி, 1 விக்கெட் இழப்புக்கு 296 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. வார்னர் 151, உஸ்மான் கவாஜா 82 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள்.