முகப்பு
கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய அயர்லாந்து!

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை அயர்லாந்து அணி கைப்பற்றியுள்ளது.

Updated On : 19 ஆகஸ்ட், 2024 at 10:59 AM
பகிர்:

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை அயர்லாந்து அணி கைப்பற்றியுள்ளது.

இலங்கை மகளிரணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஏற்கனவே நிறைவடைந்தது. முதல் டி20 போட்டியில் இலங்கை அணியும், இரண்டாவது டி20 போட்டியில் அயர்லாந்து அணியும் வெற்றி பெற்றதால் தொடர் சமனில் முடிந்தது. இதனையடுத்து, இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் தொடங்கியது.

முதல் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து வெற்றி பெற்ற நிலையில், நேற்று (ஆகஸ்ட் 18) இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக லீ பால் 81 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, அதிகபட்சமாக எமி ஹண்டர் 66 ரன்கள் எடுத்தார்.

இலங்கை தரப்பில் அச்சினி குலசூரியா மற்றும் கவிஷா தில்ஹாரி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். கேப்டன் சமாரி அத்தப்பட்டு ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

256 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி 240 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் ஹர்ஷிதா சமரவிக்கிரம சதம் விளாசி அசத்தினார். அவர் 124 பந்துகளில் 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 11 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கவிஷா தில்ஹாரி அதிகபட்சமாக 53 ரன்கள் எடுத்தார்.

அயர்லாந்து தரப்பில் அர்லின் கெல்லி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜேன் மஹூர் 2 விக்கெட்டுகளையும், ஓர்லா பிரண்டர்கேஸ்ட், அய்மி மஹூர் மற்றும் ஃபிரேயா சார்ஜண்ட் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை அயர்லாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (ஆகஸ்ட் 20) நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →