இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் - கவாஸ்கர் தொடரில் 2-வது போட்டி ஆஸ்திரேலியாவில் அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் அதிக சதங்கள் விளாசியுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, வெள்ளிக்கிழமை நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தி சதம் விளாசுவாரா என அனைவர் மத்தியிலும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய வீரர் விராட் கோலி கீழ் வரிசையில் விளையாடுவதை மிகவும் விரும்புகிறார். அவர் பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் அடித்த சதமே அதற்கு சான்றாகும். 4-வது வரிசையில் பேட்டிங் செய்த அவர் 143 பந்துகளில் 100 ரன்கள் விளாசினார். அந்தப் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக போட் ஆஃப் ஸ்பெயினின் சதம் விளாசியிருந்த விராட் கோலி அதன்பின்னர் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் விளாசி அசத்தியுள்ளார். மேலும் அவருக்கு மிகவும் பிடித்த மைதானமான அடிலெய்ட் மைதானத்தில் பிங்க் பந்தில் விளையாடுவதற்கு மிகவும் ஆவலுடன் உள்ளார்.
விராட் கோலி பல்வேறு மைதானங்களில் விளையாடி இருந்தாலும், அடிலெய்ட் மைதானத்தின் மீது தனி காதல் இருக்கிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பரில் அடிலெய்ட் மைதானத்தில் விளையாடுவதை மிகவும் விரும்புவதாகவும், உள்ளூர் மைதானங்களில் விளையாடுவது போலவும் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
அடிலெய்ட் மைதானத்தில் அனைத்து வடிவங்களிலும் விராட் கோலி சிறந்த பங்களிப்பை கொடுத்துள்ளார். இதுவரை 15 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர் 73.61 சராசரியுடன் 957 ரன்கள் குவித்துள்ளார். அதில் 5 சதங்களும், 4 அரைசதங்களும் அடங்கும்.
ஆஸ்திரேலிய வீரர்களை தவிர்த்து அடிலெய்டில் அதிக சதங்கள் விளாசியவர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் இருக்கிறார். மேலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 8 இன்னிங்ஸ்களில் 509 ரன்களும், அதில் 3 சதங்களும், ஒரு அரைசதமும் விளாசியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 4 இன்னிங்ஸ்களில் 244 ரன்களும், அதில் இரண்டு சதங்கள் விளாசியுள்ளார். டி20 போட்டிகளில் 3 அரைசதங்களுடன் 204 ரன்கள் குவித்துள்ளார்.
விராட் கோலி ஜனவரி 2012 ஆம் ஆண்டு தனது முதல் டெஸ்ட் சதத்தை அட்லெய்ட் மைதானத்தில் நிறைவு செய்தார். அதற்கடுத்ததாக, 2014 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து கேப்டன் எம்.எஸ்.தோனி விலகியதையடுத்து, விராட் கோலி கேப்டனாக பொறுப்பேற்றார். அப்போது அடிலெய்டில் நடந்த போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களில் சதம் விளாசி சாதனை படைத்தார். இருப்பினும், அந்தப் போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.