மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சதம் சடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையை இலங்கை அணியின் கேப்டன் சமாரி அத்தபத்து படைத்துள்ளார்.
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (ஜூலை 22) நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை மற்றும் மலேசியா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இலங்கை அணி 144 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் கேப்டன் சமாரி அத்தபத்து சதம் விளாசி அசத்தினார். அவர் 69 பந்துகளில் 119 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் 14 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும்.
இந்தப் போட்டியில் சதம் விளாசியதன் மூலம், சமாரி அத்தபத்து ஆசிய கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். ஆசிய கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் சதம் விளாசிய முதல் வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு ஆட்டநாயகி விருதும் வழங்கப்பட்டது.
நடப்பு ஆசிய கோப்பை தொடரில் குரூப் பி பிரிவில் இடம்பெற்று விளையாடி வரும் இலங்கை அணி, இதுவரை விளையாடியுள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.