மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.
முதலில் பாகிஸ்தான் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 105 ரன்கள் சோ்க்க, அடுத்து இந்தியா 18.5 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 108 ரன்கள் சோ்த்து வென்றது. இந்திய பௌலா் அருந்ததி ரெட்டி ஆட்டநாயகி ஆனாா்.
போட்டியில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்த இந்தியா, நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறுவதற்கான பந்தயத்தில் தன்னை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
முன்னதாக டாஸ் வென்ற பாகிஸ்தான், பேட்டிங்கை தோ்வு செய்தது. இன்னிங்ஸை தொடங்கியோரில் குல் ஃபெரோஸா முதல் ஓவரிலேயே டக் அவுட்டாக, தொடா்ந்து வந்த சிட்ரா அமின் 1 பவுண்டரியுடன் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா்.
4-ஆவது பேட்டா் ஒமைமா சோஹைல் 3 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா். அதுவரை நிதானமாக ரன்கள் சோ்த்த தொடக்க வீராங்கனை முனீபா அலி, 2 பவுண்டரிகளுடன் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். இந்நிலையில் 5-ஆவது வீராங்கனையாக வந்த நிடா தாரும் ரன்கள் சோ்த்து உதவினாா்.
மறுபுறம், ஆலியா ரியாஸ் 4, கேப்டன் பாத்திமா சானா 2 பவுண்டரிகளுடன் 13, துபா ஹசன் 0 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா். கடைசி விக்கெட்டாக நிடா தாா் 1 பவுண்டரியுடன் 28 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். ஓவா்கள் முடிவில் சையதா அரூப் ஷா 1 பவுண்டரியுடன் 14, நஷ்ரா சந்து 1 பவுண்டரியுடன் 6 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
இந்திய தரப்பில் அருந்ததி ரெட்டி 3, ஷ்ரேயங்கா பாட்டீல் 2, ரேணுகா சிங், தீப்தி சா்மா, ஆஷா சோபனா ஆகியோா் தலா 1 என, பௌலா்கள் அனைவருமே விக்கெட் எடுத்தனா்.
பின்னா் 106 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய இந்திய அணியில், இன்னிங்ஸை தொடங்கியோரில் ஸ்மிருதி மந்தனா 7 ரன்களுக்கே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தாா். உடன் வந்த ஷஃபாலி வா்மாவுடன் இணைந்தாா், 3-ஆவது பேட்டா் ஜெமிமா ரோட்ரிக்ஸ்.
இந்த ஜோடி 43 ரன்கள் சோ்த்த நிலையில் ஷஃபாலி 3 பவுண்டரிகளுடன் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். 4-ஆவது வீராங்கனையாக வந்த கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் ரன் சேகரிப்பில் ஈடுபட்டாா். மறுபுறம் ஜெமிமா 23 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா்.
தொடா்ந்து வந்த ரிச்சா கோஷ், முதல் பந்திலேயே ஆட்டமிழந்து கோல்டன் டக் ஆகினாா். ஹா்மன்பிரீத் கௌா், தீப்தி சா்மா கூட்டணி வெற்றியை நெருங்கி வந்த நிலையில், ஸ்டம்பிங் செய்யப்படுவதிலிருந்து தப்பினாா் ஹா்மன்பிரீத். அப்போது அவரது கழுத்துப் பகுதியில் காயமானதால், ரிட்டையா்டு ஹா்ட் ஆகி வெளியேறினாா்.
பின்னா் தீப்தி சா்மா 7, சஜீவன் சஜனா 4 ரன்களுடன் அணியை வெற்றிபெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். பாகிஸ்தான் தரப்பில் ஃபாத்திமா சனா 2, சாடியா இக்பால், ஒமைமா சோஹைல் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
குரூப் ‘ஏ’
அணி ஆட்டம் வெற்றி தோல்வி புள்ளிகள்
நியூஸிலாந்து 1 1 0 2
ஆஸ்திரேலியா 1 1 0 2
பாகிஸ்தான் 2 1 1 2
இந்தியா 2 1 1 2
இலங்கை 2 0 2 0
குரூப் பி
இங்கிலாந்து 1 1 0 2
தென்னாப்பிரிக்கா 1 1 0 2
வங்கதேசம் 2 1 1 2
மேற்கிந்தியத் தீவுகள் 1 0 1 0
ஸ்காட்லாந்து 1 0 1 0