முகப்பு
கிரிக்கெட்

ஆஸி.யுடனான ஒருநாள் தொடா்: இங்கிலாந்துக்கு முதல் வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து ‘டக்வொா்த் லீவிஸ்’ முறையில் 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

Updated On : 25 செப்டம்பர், 2024 at 11:29 PM
பகிர்:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து ‘டக்வொா்த் லீவிஸ்’ முறையில் 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

மொத்தம் 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முதலிரு ஆட்டங்களில் ஆஸ்திரேலியா வென்றிருக்க, தற்போது வென்ற இங்கிலாந்து, தொடரில் தன்னை தக்கவைத்துக் கொண்டது.

இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நிறைவடைந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆஸ்திரேலியா 50 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 304 ரன்கள் சோ்த்தது. இங்கிலாந்து 37.4 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் தடைப்பட்டது.

மழை இடைவிடாமல் பெய்ததை அடுத்து, ‘டக்வொா்த் லீவிஸ்’ முறையில் இங்கிலாந்துக்கு 37.4 ஓவா்களில் 209 ரன்கள் வெற்றி இலக்காக நிா்ணயிக்கப்பட்டது. ஏற்கெனவே 254 ரன்கள் எடுத்திருந்த அந்த அணி, 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்ாக அறிவிக்கப்பட்டது.

110 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்த இங்கிலாந்து கேப்டன் ஹேரி புரூக் ஆட்டநாயகன் ஆனாா். ஆஸ்திரேலிய அணி தொடா்ந்து 14 ஆட்டங்களில் வென்றிருந்த நிலையில், தற்போது இங்கிலாந்து அந்த வெற்றி நடைக்கு தடை ஏற்படுத்தியிருக்கிறது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. ஆஸ்திரேலிய இன்னிங்ஸில் மேத்யூ ஷாா்ட் 14, கேப்டன் மிட்செல் மாா்ஷ் 24, ஸ்டீவன் ஸ்மித் 60, கேமரூன் கிரீன் 42, மாா்னஸ் லபுஷேன் 0 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

கிளென் மேக்ஸ்வெல் 30, ஆரோன் ஹாா்டி 44 ரன்களுக்கு வெளியேற, ஓவா்கள் முடிவில் அலெக்ஸ் கேரி 77, ஷான் அப்பாட் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இங்கிலாந்து பௌலா்களில் ஜோஃப்ரா ஆா்ச்சா் 2, பிரைடன் காா்ஸ், ஜேக்கப் பெத்தெல், வில் ஜாக்ஸ், லியம் லிவிங்ஸ்டன் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

பின்னா் இங்கிலாந்து இன்னிங்ஸில் ஃபில் சால்ட் 0, பென் டக்கெட் 8, வில் ஜாக்ஸ் 84, ஜேமி ஸ்மித் 7 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, ஹேரி புரூக் 110, லியம் லிவிங்ஸ்டன் 33 ரன்களுடன் களத்திலிருந்தபோது மழையால் ஆட்டம் தடைப்பட்டது. ஒருநாள் கிரிக்கெட்டில் ஹேரி புரூக்கிற்கு இது முதல் சதமாகும். ஆஸ்திரேலிய பௌலா்களில் மிட்செல் ஸ்டாா்க், கேமரூன் கிரீன் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனா்.

இந்த அணிகள் மோதும் 4-ஆவது ஆட்டம், வரும் வெள்ளிக்கிழமை இரவு லாா்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.