வெள்ளைப் பந்து போட்டிகளில் இந்திய அணியின் அதிரடியான அணுகுமுறைக்கு காரணமானவர்கள் என இரண்டு பேரை இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே நேற்று (நவம்பர் 30) நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அசத்தியது. தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரோஹித் சர்மா 57 ரன்களும், விராட் கோலி 135 ரன்களும் எடுத்தனர். கே.எல்.ராகுல் 60 ரன்கள் எடுத்தார்.
இந்த நிலையில், வெள்ளைப் பந்து போட்டிகளில் இந்திய அணி அதிரடியாக விளையாடும் அணுகுமுறையை பின்பற்றுவதற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவும், முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுமே காரணம் என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது யூடியூப் சேனலில் அவர் பேசியிருப்பதாவது: இந்திய அணி எப்படி செயல்பட வேண்டும் என்பதை அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா எப்போதும் அணி வீரர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் பேட்டிங்கில் ஏற்பட்டுள்ள மாற்றத்துக்கான பாராட்டுகள் அனைத்தும் ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட்டையேச் சேரும். அவர்கள் இருவரும் எப்படி விளையாட வேண்டும் என இந்திய அணிக்கு புதிய வழியைக் காட்டினார்கள். அவர்களது முயற்சியால் இந்திய அணி தற்போது அதிரடியாக விளையாடும் அணுகுமுறையை வளர்த்துக் கொண்டுள்ளது.
நான் ஒரு விஷயத்தை கூறிக் கொள்கிறேன். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா பேட்டிங் செய்வதை நாம் எத்தனையோ முறை மிகவும் மகிழ்ச்சியாக பார்த்து ரசித்திருக்கிறோம். அதனை தொடர்ச்சியாக செய்வதற்கு நாம் அவர்களை தயவுசெய்து அனுமதிக்க வேண்டும். ஏனெனில், அவர்கள் ஓய்வு பெற்றுவிட்டால், அவர்கள் எப்படிப்பட்ட வீரர்கள் தெரியுமா எனப் பிறர் பேசுவதை மட்டுமே கேட்க முடியும். அவர்கள் மீண்டும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் எனவும் கூறுவார்கள். ஆனால், அதில் எந்த ஒரு பயனும் இல்லை.
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இந்திய அணிக்காக எவ்வளவு ஆண்டுகள் விளையாடினாலும் நாம் அவர்களைக் கொண்டாடலாம். நான் ஏற்கனவே கூறியதுபோல, வாழ்க்கை மிகவும் வேகமாக சென்றுவிடும். யாருக்காகவும் நேரம் காத்திருக்காது. காலம் குறைவாக உள்ளது என்பதை நாம் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். அதனால், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாடுவதை பார்த்து மகிழ்வோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.