ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல இந்திய அணிக்கு முக்கியமான வீரர்கள் யார் என்பது குறித்து முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா பேசியுள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்குகிறது. டி20 உலகக் கோப்பைத் தொடரில் தனது முதல் போட்டியில் இந்திய அணி அமெரிக்காவை எதிர்த்து விளையாடவுள்ளது.
இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றிவிட்டது. உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றியுள்ளது அணியின் தன்னம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது.
ரோஹித் சர்மா கூறுவதென்ன?
விரைவில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ள நிலையில், எதிர்வரும் உலகக் கோப்பைத் தொடரில் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா மற்றும் வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இருவரும் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான வீரர்களாக இருப்பார்கள் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் இருவரும் இடம்பெற்றுள்ளது இந்திய அணிக்கு மிகப் பெரிய நேர்மறையான விஷயமாக உள்ளது. ஏனெனில், இவர்கள் இருவரும் எப்போதும் விக்கெட் வீழ்த்தும் விதமாக பந்துவீசக் கூடியவர்கள்.
புதிய பந்தில் ஸ்விங் செய்து சீக்கிரமாக விக்கெட்டுகளைக் கைப்பற்றுவது அர்ஷ்தீப் சிங்கின் மிகப் பெரிய பலம். அவர் புதிய பந்தில் பந்துவீசுவார். மேலும், டெத் ஓவர்களையும் வீசுவார். ஆட்டத்தின் தொடக்கம் மற்றும் முடிவு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இந்த இரண்டு சூழலிலும் அவர் பந்துவீச்சில் திறம்பட செயல்படக் கூடியவர். அவர் எப்போதும் விக்கெட் வீழ்த்த வேண்டும் என பந்துவீசக் கூடியவர் என்ற காரணத்தினால் ஆட்டத்தின் முதல் ஓவரை வீசுகிறார். டி20 உலகக் கோப்பைத் தொடரில் அவரது பந்துவீச்சு இந்திய அணிக்கு மிகவும் முக்கியம்.
இந்திய அணியில் ஹார்திக் பாண்டியா இடம்பெறும் போதெல்லாம் அவரது பங்களிப்பு அணிக்கு மிகப் பெரிய அளவில் இருந்திருக்கிறது. அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படுகிறார். இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறும்போது, ஹார்திக் பாண்டியாவின் பேட்டிங் மிகவும் முக்கியமானதாக உள்ளது. மிடில் ஆர்டரில் 5,6 அல்லது 7-வது வீரராக விளையாடுவது மிகவும் கடினம். அதன் காரணமாகவே எந்த ஒரு வடிவிலான போட்டி என்றாலும் ஹார்திக் பாண்டியாவின் பங்களிப்பு அணிக்கு மிகவும் முக்கியம்.
ஹார்திக் பாண்டியாவின் பந்துவீச்சு குறித்து நமக்குத் தெரியும். அவரால் ஆட்டத்தின் தொடக்கத்தில், நடுவில் மற்றும் இறுதிக்கட்டத்தில் என எல்லா இடங்களிலும் பந்துவீச முடியும். அவர் அணிக்கு மிகவும் முக்கியமானவர். பாண்டியா இருப்பதால் இந்திய அணி சமபலத்துடன் உள்ளது என்றார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பைத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.